பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடைதிறப்பின் உட்பொருள்

29


துணங்கையர் குரவையர் அணங்கெழுந் தாடிப்
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீக்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி.[1]

[நோலை - எள்ளுருண்டை; விழுக்குடைமடை - நிணத்துடன் கூடின சோறு; அணங்கு-தெய்வம்; வசி-மழை]

என்ற சிலப்பதிகாரப் பகுதியால் அறியலாம் அன்றியும், செங்குட்டுவனது வடநாட்டு வெற்றியை அறிந்த ஆயச் செவிலியர் அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று துயிலெழுப்பி யுணர்த்திப் பாட்டொடு தொடுத்து வாழ்த்தியதையும்,

வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக்
குணதிசை குன்றத் துயர்மிசைத் தோன்றக்
........................................
துணையணை பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு
எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம்
அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர்
தோட்டுனை துறந்த துயரீங் கொழிகெனப்
பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்த[2]

இளங்கோவடிகள் சுட்டுகிறார்,எனவே,சயங்கொண்டாரும் செருக்களத் தியல்புகளை மகளிர்க் கூற்றில் வைத்துச் சிறப்பித்தார். அங்ஙனம் கூறுவது பண்டைய மரபை யொட்டியே உள்ளது.

சில காதல் நிகழ்ச்சிகள்

கடை திறப்புப் பாடல்கள் அனைத்தும் 'காதல் ரஸம்' சொட்டும் அற்புதப் பாக்கள். அவற்றுள் ஒருசிலவற்றை ஈண்டு காண்போம்.


  1. சிலம் - 5 : 67.73,
  2. சிலப் 27: 195-212.