பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.38

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


அவை வாழ்விலும் தாழ்விலும் தம் தலைவியாகிய காளிதேவியின் அடியை மறவாதிருக்கின்றன. இதனை

எவ்வனங்கும் அடிவனங்க
இப்பெருமை படைத்துடைய
அவ்வணங்கை அகலாத
அலகைகளை இனிப்பகர்வாம்.[1]

[அணங்கு-தெய்வமகளிர், காளி; அலகை-பேய்]

என்பனால் அறியலாம். தமக்கு உணவின்மையால் உயிர்விடும் காலம் நெருங்கி விட்டது என்று தம் தேவியிடம் கூறிக்கொண்டு அவளை விட்டு அகலாதிருக்கின்றன. பசிக் கொடுமையைக் கவிஞர்,

புயல ளிப்பன மேலும வளித்திடும்
பொற்க ரத்தபயன்புலி பின்செலக்
கயலொ ளித்தக டுஞ்சுரம் போலகங்
காந்து வெம்பசி யிற்புறந் தீந்தவும்[2]

[புயல்-மேகம்; கயல்.கயற்கொடி, சுரம்-பாலை நிலம்; பசியின்-பசியால்; தீதல்-கரிதல்]

என்று காட்டுகிறார். ஈகையில் மேகத்தையும் வென்ற சோழனுடைய புலிக்கொடி துரத்த அதற்கு ஆற்றாது பாண்டியனுடைய மீனக்கொடி ஒளித்துள்ள கொடிய பாலை நிலத்தைப் போல, வயிற்றின் உட்பக்கத்தில் வருத்தும் பசியின் வெம்மையால் உடலின் வெளிப்பக்கம் தீந்து கரிந்திருக்கின்றது. ஒவ்வொரு பேயின் வயிறும் பசியென்ற பொருளை அதிகமாக அடைத்து வைத்துள்ள குப்பி போன்றது.


  1. தாழிசை-134
  2. தாழிசை-143