' கலிங்கத்துப் பரணி ' சுவைமிக்க ஓர் அரிய நூல். தமிழ்த் தாய் பெற்ற அரிய அணிகளுள் கலிங்கத்துப் பரணி சிறந்த இடம் பெறுகின்றது. வீரச் சுவைக்கு நிலைக்களனான கலிங்கத்துப் பரணி, காதல் சுவையை அதனினும் திறம்பட எடுத்துக் கூறுவது பாராட்டி மகிழ்தற்குரியது. பதின்மூன்று பகுதிகளைக் கொண்ட இப் பரணி நூலில் ' கடை திறப்பு ' என்ற ஒரு பகுதி, காதற் சுவையைப் பிற எந்த நூலினும் மேம்பட வாரி வழங்குகிறது.
தடையறாப் பெருந்துறவியாகிய தாயுமான அடிகளும் இப் பரணி நூலின் கடை திறப்புப் பகுதியில் உள்ளத்தைப் பறிகொடுத்து ‘உபய தனம் அசையில்” என்ற தாழிசையை எடுத்துத் தமது பாட்டில் நயம்படக் கையாண்ட முறையை இத் திறனாய்வு நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார் அன்பர் சுப்பு ரெட்டியார்.
கவிஞர் சயங்கொண்டார் சுமார் 800 ஆண்டுகட்கு முன்னர் இருந்தவர் என்று காலக் கணக்கர் கூறுவர். சயங்கொண்டாரின் பாடல்களில் அவருக்கு முன்னே இருந்த சிறந்த புலவர்களின் கருத்துச் செறிவை ஆங்காங்குக் காணலாம்.
காணாக்கால் காணேன் தவறாய; காணுங்கால்
காணேன் தவறல் லவை
என்ற திருக்குறளையும்