பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


பல்லியங்கள் முதலியவை ஒலிக்கப்பெறும், சங்கொலி மங்கல ஒலியாகக் கருதப்பெற்றது.[1] பயணம் செய்வோர் யானை, தேர், சிவிகை ஆகியவற்றில் ஏறிச் செல்வர். அரசர்கள் களிறூர்ந்து செல்லலும் தேவியர் பிடியூர்ந்து செல்லலும் அக்கால வழக்கமாகும்.[2]

சிற்றரசர்கள், மணிமாலை, பொன்னணி, முடி, பொற்பெட்டி, முத்துமாலை, மணிகள் இழைத்த ஒற்றைச்சரடு, மணிக்குவியல், பொற்குவியல், மகரக் குழை முதலியவற்றையும் யானை, குதிரை, ஒட்டகம் முதலியவற்றையும் பேரரசர்கட்குத் திறைப்பொருள்களாகத் தரும் வழக்கம் இருந்தது.[3] திறைப் பொருள்கள் எருதுகளின்மீது கொண்டுவரும் வழக்கம் இருந்தாகத் தெரிகிறது. இதனைப்,

'பகடு சுமந்தன திறைகள் '[4]

என்ற சொற்றொடரால் அறியலாம். மகளிரையும் திறைப் பொருளாகக் கவர்வதும் உண்டு, சிற்றரசா்கள் பேரரசர்கட்கு மகளிரைத் திறைப்பொருளாகத் தருவதும் உண்டு.[5] அம்மகளிர் தனியாக வாழு இடத்தை 'வேளம்'என்று குறிப்பிடுவர். அந்தப்புரத்தில் சேடியராகப் பணியாற்றுவர்.[6] இது போலவே, சிற்றரசர்கள் பேரரசர்கட்குக் குற்றேவல் புரிவர்.[7]


  1. தாழிசை-283
  2. தாழிசை-285, 286.
  3. தாழிசை 334, 335, 326
  4. 27 தாழிசை-272
  5. தாழிசை-41, 459
  6. 29 தாழிசை-40, 826,
  7. தாழிசை-325.