பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வரலாற்றுக் கருவூலம்

65


அக்காலப் போர் முறை

கலிங்கத்துப் பரணியால் அக்காலப் போர் முறைகளையும் அறியலாம். அரசர்கள் போருக்குப் புறப்படுங்கால் சங்கு முழக்கியும் முரசதிர்ந்தும், இயமரம் இரட்டியும், கொம்புகளை ஒலித்தும் செல்வது வழக்கம்.[1] பகையரசர் நாட்டினைப் படைகள் தாக்குங்கால் அவர் ஊரினை எரிகொளுவியும் சூறை கொண்டும் அழித்தல் இயல்பாக இருந்தது. கருணாகரனின் படை கலிங்க நாட்டினை அழித்த செய்தியை,

அடையப் படர் எரி கொளுவிப் பதிகளை
அழியச் சூறைகொள் பொழுதத்தே[2]

என்று கவிஞர் கூறுவதைக் காண்க.

போர்க்களத்தில் இருதிறத்துப் படைகள் ஒன்றோடொன்று போரிடுங்கால், நால்வகைப்படையுள் ஒவ்வொரு வகைப் படையும் அவ்வப் படையுடனேயே போரிடுவது மரபு. உலக்கை, சக்கரம், குத்தம், பகழி, கோல், வேல் முதலியவை போர்க்கருவிகளாகப் பயன்பட்டன. இரவில் போர் செய்தலை மேற்கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. கலிங்கப்போரின் மேற்சென்ற படை,

உதயத்து ஏகுந்திசை கண்டு அது
மீள விழும் பொழுது ஏகல் ஒழிந்து.[3]

என்று கூறப்படுதலாலும், கலிங்க வேந்தன் படை சூழப்பற்றியிருந்த மலைக்குவட்டை சூரியன் மறையும் நேரத்தில் அணுகிய படை,


  1. தாழிசை-344,
  2. தாழிசை-370.
  3. தாழிசை:362