பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


வழங்கின. கவிஞர் இவற்றைப் பேய்கள் அணிந்தவையாகக் கூறுகிறார்.[1] குழந்தைகளுக்கு ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் இருந்தது. குழந்தை தளர் நடை பயின்று மழலை மொழியத் தொடங்கும் பருவத்தில் காப்புக் கடவுளாகிய திருமாலின் ஐம்படையாகிய சங்கு, சக்கரம், தண்டு, வில், வாள் என்னும் ஐந்தன் உருவங்களைப் பொன்னால் செய்து அவற்றைக் கோத்து அணிதல் வழக்கம். இது ஒரு குறிப்பிட்ட பருவத்தில்தான் அணியப்படும்.[2]

படுக்கை

மக்கள் உறங்குவதற்காக வெண் பஞ்சு, செம் பஞ்சு, இலவம்பஞ்சு, மயிர், அன்னத்தின் தூவி ஆகிய ஐந்து பொருள்களாலான மெத்தைகளைப் பயன்படுத்தினர். அரசன் முதலியோர் படுக்கையில் இந்த ஐவகை மெத்தைகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக இடுவர். இதனால்தான் இப்படுக்கையைப் 'பஞ்சசயனம்' என்று வழங்குவர். காளி பேய்கள் சூழப் பஞ்சசயனத்தின் மீது வீற்றிருந்தாளாகக் கூறப்பெறுகின்றாள்.[3] தீபக்கால் கட்டில் என்ற ஒருவகைக் கட்டில் உபயோகத்திலிருந்ததாகத் தெரிகின்றது.[4]

பொழுதுபோக்கு

அரசர்கள் புலவர்களுடன் இலக்கியச் சுவையில் ஈடுபட்டு இன்புறுதல் வழக்கம். குலோத்துங்கன் இவ்வாறு மகிழ்ந்திருந்ததைக் கவிஞர்,


  1. தாழிசை-510-514.
  2. தாழிசை-239.
  3. தாழிசை-154
  4. தாழிசை-153.