பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


அமைந்து கிடக்கும் பொழுது புதியதோர் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. அவற்றைக் கொண்டு கவிஞன் புதிய "ரசவாதமே" செய்து விடுகின்றான்.

சொல்லோவியம்

கவிஞன் காட்டும் சொல்லோவியம் வெறும் பொருள்கள் அல்லது கருத்துக்களைத் தெரிவிக்கும் குறியீடுகளின் கோவை அன்று. நாம் சொற்களாகிய அக் குறியீடுகளைப் படிக்கும்பொழுதே அப்பொருள்களையே நேரில் காணுவது போன்ற உணர்ச்சியைப் பெறுகின்றோம்.

"ஆதரித்து அமுதில் கோல்தோய்த்து
   அவயவம் அமைக்குந் தன்மை
யாதெனத் திகைக்கும் அல்லால்
   மதனக்கும் எழுத ஒண்ணாச்
சீதை" [1]

பான்ற கம்பநாடனின் சொல்லோவியம் சீதையை நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. மழைக்காலத்தை நாம் 'கார்காலம்' என்ற சொற்றொடரால் குறிப்பிடுவோம். சேக்கிழார் பெருமான் அறையிலிருந்து படிக்கும் நம் முன்னே ,

நீலமா மஞ்ஞை ஏங்க
   நிறைகொடிப் புறவம் பாடக்
கோலவெண் முகையேர் முல்லைக்
   கோபம்வாய் முறுவல் காட்ட
ஆலுமின் இடைசூழ் மாலைப்
   பயோதரம் அசைய வந்தாள்
ஞால நீ டரங்கில் ஆடக்
   காரெனும் பருவ நல்லாள்[2]


  1. கம்ப-பாலகா. மிதிலைகாட்சி செய் 4
  2. பெரியபு ஆனாய நாயனார் செய் 19