உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை ஊற்று

85


படுத்துகின்றன. காளிதேவி உறையும் பாலைவனத்தின் வெம்மையைக் கூறுமிடத்தே பல தற்குறிப் பேற்ற அணிகள் அமைந்து நூலை அணி செய்கின்றன. தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகச் சங்கநூல்களில், பாலையைக் கூறும் பகுதிகள் மிகச் சிறந்து விளங்குகின்றன. பாலை நிலம் வெம்மை மிக்க வறனுள்ள இடம் ; உண்ண நீரற்றது : மக்கள் நடந்து கடந்து செல்ல இயலாதது. இந்த வெம்மை நிலத்தின் கொடுமையை விளக்கும் அற்புதச் சொல்லோவியங்களைச் சங்கப் பாடல்களில் காணலாம். ஐந்திணையைக் கூறும் பாடல்களுள் பாலைத்தினைப் பாடல்கள் அதிகமாகவும் உள்ளன: மிக நேர்த்தியாகவும் அமைந்துள்ளன. துன்பத்தை நினையுங்கால் மனித தத்துவம் விளங்குமாப் போல, காட்டின் வெம்மையையும் கொடுமையையும் எண்ணுங்கால் இனிய கவிதைகள் முகிழ்த்தன போலும் !

மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிய புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடு[1]

[மரைஆ-மரைமான் ; மரல்-ஒருவகைத் தாழை; தவிர: உண்ண; வரை - மலை ; புரையோர் - குற்றத்தை யுடைய மறவர்;]

என்பது கலித்தொகை காட்டும் பாலை ஓவியம். கானம் மாரி வறப்ப, மரம் வெம்ப, மரையா மரல் கவர நிற்கின்றது. இரண்டு புறங்களிலும் மலைகள்


  1. பாலைக்கலி - 6