பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. கொள்ளும் பொருளிலராயினும் கானவரது பகழி உடலில் மூழ்கி வழிப்போக்கர் சுருங்கி, உண்ண நீரற்று, புலர்ந்து வாடும் நாவினைத் தமது கண்ணீரைக் கொண்டு நனைக்கின்றனர். இத்தகைய கொடுமையைக் காட்டுகிறது பாலை பாடிய பெருங்கடுங்கோவின் சொல்லோவியம். அகநானூறு என்ற தொகை நூலில் பாலையைப் பற்றியே இருநூறு பாடல்கள் காணப்படுகின்றன. ஏனையவற்றிலும் பல இனிமையான பாலைத்திணைப் பாடல்கள் உள்ளன. இங்ஙனம் பண்டையோர் சிறப்பித்த பாலை நிலத்தைச் சயங்கொண்டாரும் தன் சொல்லோவியங்களால் அழகு ஒழுக, இனிமை சொட்ட, கற்பனை நயம் பொதுள, வருணித்துள்ளார். அத்தகைய ஓவியங்கள் ஒரு சிலவற்றை ஈண்டு காண்போம்.

கதிரவன் வெம்மையைத் தாங்க முடியாமல் பூமியில் ஏராளமான வெடிப்புக்கள் காணப்படுகின்றன. அவற்றினுளெல்லாம் பகலவன் கிரணங்கள் பாய்ந்து செல்கின்றன. இயல்பாக உள்ள இதனைக் கவிஞர்,

தீய அக்கொடிய கான கத்தரைதி
றந்த வாய்தொறுநு ழைந்துதன்
சாயை புக்கவழி யாதெ னப்பரிதி
தன்க ரங்கொடுதி ளைக்குமே.[1]

[தரைதிறந்தவாய்-வெடிப்புக்கள்; சாயை-கதிரவனின் மனைவி; பரிதி-ஞாயிறு, கரம்-கை; திளைத்தல்-தொழி லில் இடைவிடாது பயிலுதல்.]

என்று தன் கற்பனை நயம் தோன்றப் புலப்படுத்துகிறார், வெடிப்புக்களில் சூரியனின் கதிர்கள்


  1. தாழிசை-79.