பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை ஊற்று

89


இடையின் நிலை அரி(து) இறும்இறும் என எழா
   எமது புகலிடம் இனிஇலை எனவிழா
அடைய மதுகரம் எழுவது விழுவதாம்
   அளக வனிதையர் அணிகடை திறமினோ[1]

[இடை-இடுப்பு: இறும் ஒடியும்; புகலிடம்-அடைக்கலம்; மதுகரம்-வண்டு, அளகம்-கூந்தல்; வனிதையர் - பெண்கள்]

என்பது கவிஞரின் சொல்லோவியம். இதே கருத்து,

நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண்
   தேன் நசையால்
சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்: கொண்டை
   சார்வதுவே,[2]

என்ற திருக்கோவையாரின் அடிகளில் வந்துள்ளது. இரண்டையும் ஒப்பு நோக்கி எண்ணி மகிழ்க.

உயர்வு நவிற்சி

பொருள்களின் மேம்பாட்டைப் புலப்படுத்துவ தற்கு சில இடங்களில் கவிஞர் மேற்கொண்டுள்ள உயர்வு நவிற்சி யணிகள் பொருளை விளக்கமுறுத்தி இன்பம் பயக்கின்றன. பாலை நிலத்தின் வெம்மையைக் கவிஞர்,

அணிகொண்ட குரங்கினங்கள்
  அலைகடலுக் கப்பாலை
மணலொன்று காணாமல்
  வரை எடுத்து மயங்கினவே[3]

[அணிகொண்ட-போர் செய்ய எழுந்த வரைமலை]

என்று உயர்வு நவிற்சியாக உரைக்கின்றார்.


  1. தாழிசை-57 29,
  2. திருக்கோ-45
  3. தாழிசை-96