பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. குலோத்துங்கன் குல மரபு


வேங்கடம் முதல் குமரிவரை பரவிய பெரு நிலப் பரப்பைக் கொண்டது பைந்தமிழ் நாடு. வேங்கடம், பொதியம், பறம்பு, கொல்லி என்ற வளங்கொழிக்கும் மலைகளைத் தன்னகத்தே கொண்ட மாண்பும் அதற்கு உண்டு. வான் பொய்ப்பினும் தான் பொய்யாது வந்து பாயும் காவிரி, வையை, பொருநை போலும் பேராறுகளின் பாய்ச்சலைப் பெறும்பேறும் அதற்கு வாய்த்திருந்தது. வேலி ஆயிரம் விளையும் நிலம், ஒரு களிறு படியும் இடம் ஏழு களிறுகளைப் புரக்கவல்ல வளம் தரும் நிலம் என வாயார வாழ்த்தப்பெறும் வளம் மிக்க நிலங்கள் அந்நாட்டு நிலங்கள். மலைபடு பொருள்களாம் அகிலையும், ஆரத்தையும், மிளகையும், கடல்படு பொருளாம் முத்தையும், கைத்தொழில் திறம் காட்டும் நுண்ணிய ஆடை அணிகளையும் கடல் கடந்த நாடுகளுக்குக் கலம் ஏற்றி அனுப்பிக் கடல் வாணிகம் வளர்த்துக் குவித்த செல்வத்தால் செம்மாந்திருக்கும் சிறப்பும் அச் செந்தமிழ் நாட்டிற்கு இருந்தது. அரணும் அகழியும் அரிய காவற் காடும் சூழ்ந்து கிடக்க, அகநகர் புறநகர் என்ற அமைப்பு முறையில் குறைபடாது. கோடை வெயிலுக்கோ, உதிர்க் குளிருக்கோ கலங்காது வாழ்தற்கு வாய்ப்பளிக்கும் வகை வகையான நிலைகளைக் கொண்ட மாடங்கள், வரிசை வரிசையாக விளங்க, வேந்தர்க்கும் வேதியர்க்கும், வணிகர்க்கும், வேளாளர்க்கும் தனித் தனியே அமைந்த அழகிய அகன்று நீண்ட பெருந் தெருக்களைக் கொண்ட மாநகர்களாம் மதுரை, புகார், உறையூர், வஞ்சி, காஞ்சி, தஞ்சை போலும் பேரூர்கள் பல அந்நாடெங்கும் அமைந்து அழகு தந்திருந்தன.