பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


நகரையும், அந்நகரின் பொன் வளத்தையும், அந்நகராண்ட நந்த மன்னர்களின் நீணிதிப் பெருக்கையும்,பேராசைப் பேயனாகிய அக்குலக் கோமகன் ஒருவன் பெரும் பதுமம் என்று பேரெண் அளவு ஈட்டிய தன் மாநிதியைத் தான் அல்லது பிறர் எவரும் அறிதலோ அடைதலோ ஆகாது எனும் அழிவுள்ளம் கொண்டு, கங்கைக்கு அடியில் சுருங்கை அமைத்து, அதில் வைத்துக் காத்து வாருங்கால், கங்கையின் போக்கு திடுமென மாற, அம்மாநிதி வைத்த இடம் அறியாவாறு மறைந்து போன மானக் கேட்டையும், நம் பழந்தமிழ்ப் புலவர்கள் அறிந்திருந்தார்கள். தாம் அறிந்த அச்செய்திகளைத் தம் பாக்கள் வழியே நமக்கும் புலப்படுத்தியுள்ளார்கள்:

"வெண்கோட்டு யானை சோனைபடியும்”
பொன்மலி பாடலி,”
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழிஇக், கங்கை
நீர் முதல் கரந்த நிதியம்."

பழந்தமிழ்ப் புலவர்களால், பாடலி எனப் பெயரிட்டு அழைக்கப் பெறும் அப்பேரூர், பாடலிபுத்ரம், புஷ்பபுரம், குசுமபுரம் என்றெல்லாம், அக்கால மக்களாலும், அந்நாட்டு மக்களாலும் அழைக்கப் பெற்றது. மலர் நகரம் என்ற மாண்புமிக்க பொருள் தரும் பெயரைத் தாங்கி நிற்கும் அப்பேரூர், கி.மு. 500-ல், மகத நாட்டின் மன்னனாய் மணி முடி புனைந்து கொண்ட அஜாதசத்ரு என்ற ஆற்றல் மிக்க பெருவீரனால், கங்கைக்கும் வடக்கில் விளங்கிய நாடுகளைக் கட்டிக் காக்கும் கருத்தையுட் கொண்டு, கங்கையும் சோணையும் கலக்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அவன் காலத்தில் ஒரு சிற்றர ணாகத் தோற்றுவிக்கப்பட்ட பாடலியை, அவன் பெயரன், புகழ் மிக்க பேரூராக மாற்றி மாண்புற்றான். பாடலி, பாடலிபுரத்தில் எனப் பண்டு பெயர் பெற்றிருந்த அந்நகர்க்கு இக்கால மக்கள் இட்டு வழங்கும் பெயர்கள் பாட்னா, பங்கிபூர் என்பனவாம்.