பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


கி. மு. 500-ல் தோற்றுவிக்கப்பட்ட பாடலி, கி. மு. 600-லும் பெருமை குன்றாமலே விளங்கிற்று. மகத நாடாண்ட மௌரிய மன்னர்களின் அரசவைக்குக் கிரேக்க நாட்டுக் காவலன், கி. மு. 300-ல் அனுப்பிய நல்லெண்ணத் தூதுவன் மெகஸ்தனிஸும், இந்நாட்டுச் சமய நிலைகளை நேரில் கண்டறிய, கி. பி. 400-ல் இந் நாட்டிற்கு வந்திருந்த முதற் சீனப் பெருமகனாகிய பாகியானும், அப்பெரு நகரில் பல காலம் வாழ்ந்து, அதன் பல்வேறு நலங்களையும் கண்டு களித்து, தாம் கண்ட அந்நலங்களை நம்மனோரும் கண்டு களிக்க, விரிவாக எழுதி வைத்துச் சென்றார்கள்.

பாடலிபுத்ரம், கங்கையும் சோணையும் ஒன்று கலக்கும் கூடற்கண், சோணையாற்றின் வடகரையில், கங்கைக்குச் சில கல் தொலைவில் தோற்றுவிக்கப்பட்டது. கங்கையின் போக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மாறி, ஏறக்குறைய பன்னிரண்டு கல் தொலைவிற்கு அப்பால் ஒடத் தொடங்கி விட்டது. பண்டு கண்ட பாடலி இப்போது இல்லை; கங்கை வெள்ளத்தில் அது அழிந்து விட்டது போலும். புதையுண்டு போன பழைய பாடலியின் மீதே, இக்கால பாட்னா நகரம் பெருமிதமாக வீற்றிருக்கிறது. பழைய பாடலி, ஒன்பது கல் நீளமும், ஒன்றரைக் கல் அகலமும் கொண்ட, நீண்ட சதுரப் பேரூராக நின்று காட்சி அளித்தது. அது பெருமரத் துண்டுகளால் ஆகி, அகன்று உயர்ந்த மதில்களால் வளைப்புண்டு கிடந்தது. குடைந்து அமைத்த அறுபத்தினான்கு வாயில்களும், மணி முடியென, வானுற உயர்ந்து விளங்கும் ஐந்நூற்று எழுபது கோபுரங்களும் அரண் மதில்களுக்கு அணி செய்து கிடந்தன. அரணைச் சூழ, ஆழ்ந்து அகன்ற அகழி வெட்டி, அதில் சோணையாற்றின் நீரைத் தேக்கித் தலைநகரைக் காத்து வந்தார்கள். அழகிய மரஞ்செடி கொடிகள் அணி அணியாக வளர்ந்து நிற்க, வண்ணத்தாலும், வடிவாலும் வனப்பு காட்டும்