பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


பூண்டு வளர்ந்த இளைஞன், உலகியல் உணர்வு வரப் பெற்றதும், தன் மரபினர் சூட வேண்டிய மணி முடியை, மன்னர் குலத்துக்கு மாசூட்டிய ஒருவன் சூடியிருப்பதை அறிந்து உளம் கொதித்தான்; சந்திரகுப்தன் பிறப்பையும்,அவன் உள்ளத்தில் உருவெடுக்கும் அரசியல் புயலையும் கண்டு கொண்டான் அரியணையில் வீற்றிருக்கும் அக்கள்ளக் காதவன்; உடனே சந்திரகுப்தனை நாடு கடத்தி விட்டான்.

நாடு கடத்தப்பட்ட சந்திரகுப்தன், பஞ்சாப் சென்று வாழ்ந்திருந்தான். ஆங்குத் தலை மறைந்து வாழ்ந்திருந்த சந்திரகுப்தன், அக்காலை ஆங்குப் படையெடுத்து வந்த கிரேக்க வீரன் அலெக்சாந்தரைக் கண்டான். கண்டு “மகதநாட்டு அரியணையில் வீற்றிருப்பவன், அரசர் வழியில் வராதவன்; அம்பட்டர் வழியில் வந்தவன். அதனால் மக்கள் அவன்மீது மாளா வெறுப்புக் கொண்டுள்ளனர்; ஆகவே இந்நிலையில் என்னோடு வந்தால், மகத நாட்டை வெற்றி கொள்ளலாம்; வருக” என வேண்டுகோள் விடுத்தான். இருநூறு ஆயிரம் வீரர்களையும், இருபதாயிரம் குதிரைகளையும், இரண்டாயிரம் தேர்களையும் நாலாயிரம் யானைகளையும் கொண்டிருந்த மகத நாட்டின் படைவலி கண்டு அஞ்சியோ, உள்ள அரசழித்துத் தான் ஆள எண்ணும் சந்திரகுப்தன் ஆசை அடாதது என எண்ணியோ அலெக்சாந்தர் அவ்வழைப்பை ஏற்றுக் கொண்டிலன். மேலும் சில ஆண்டுகள் சென்றன.

மாவீரன் அலெக்சாந்தர் தன் தாய் நாட்டிற்குத் திரும்பிவிட்டான். அவன் கால்கள் இந்திய மண்ணிலிருந்து மறைந்துவிட்டன என்ற செய்தி அறிந்ததும், அதுகாறும் அவன் ஆண்மை ஆற்றல்களுக்கு அஞ்சி அடங்கியிருந்த அரசரெல்லாம், அயலார் ஆட்சித் தலைமையை வெறுத்து, தத்தம் ஆட்சியை நிறுவத் துணிந்து முன் வந்தார்கள். இங்கு இவ்வுரிமையுணர்ச்சி ஊற்றெடுத்துப் பெருகிக் கொண்டிருக்கும் காலத்தில், அலெக்சாந்தர் இடை வழியில் இறந்து போனான் என்ற செய்தியும்