பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


வேலை செய்தல் வேண்டும்; ஆக்கப்படும் பொருள்கள் கலப்பற்று, கைத்திறம் விளங்கும் உயர்வுடையவாதல் வேண்டும்; நுண்கலைத் தொழில் வல்லார்க்கு, மன்னர்க்கு நிகரான மதிப்பளிக்க வேண்டும்; அவர்க்கும், அவரால் ஆக்கப்பட்ட அரும் பொருளுக்கும் கேடு விளைப்பவரின் கையையும் கண்ணையும் போக்கும் கடுந்தண்டம் அளிக்க வேண்டும் என்ற அரச ஆணைகளைச் செயற்படுத்துவது அக்குழுவின் அலுவலாம். இரண்டாங்குழு கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்து வாழ்பவரின் நல்வாழ்க்கையில் நாட்டம் செலுத்திற்று. வெளி நாட்டார்க்கு வாழ்விடம் தேடித் தருவதும். வழித்துணையளிப்பதும், நோயுற்றால் அது தீர மருந்தளிப்பதும், இறந்து போவார் உடலை உரிய முறையில் அடக்கம் செய்வதும், அவர் உடைமைகளைக் காத்து உரியவார் பால் ஒப்படைப்பதும் அக்குழுவின் கடமைகளாம். மகத நாட்டு மக்களின் பிறப்பு இறப்புக்களை மறவாமல் பதிவு செய்யும் பணியை மூன்றாங்குழு மேற்கொண்டிருந்தது. நாட்டிற்குத் தேவையாம் பொருள் அளவையும், நாட்டு மக்களிடத்திலிருந்து பெறக்கூடிய வரியளவையும் அறியத் துணை புரிவது இக்குழுவினர் காட்டும் கணக்கே ஆதலின், அதன் அலுவல் அரசாட்சிக்கு இன்றியமையாது வேண்டப்பட்டது. தம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர் ஒவ்வொருவரைப் பற்றியும் குறித்து வைக்க வேண்டுவது நகரக் காவலரின் நீங்காக் கடமையாம்; ஆண் அல்லது பெண், இளைஞன் அல்லது முதியோன், சாதி, இயற் பெயர், குடிப்பெயர், செய்தொழில், ஆண்டு வருவாய், ஆண்டுச் செலவு, உள்ள கால்நடைச் செல்வம் ஆகிய இவை குறித்த விளக்கங்களை ஒன்று விடாமல் குறித்து வைப்பர். அது மட்டுமன்று; தம் ஆட்சி எல்லைக்குள் வருவோர் போவோரின் எண்ணிக்கையையும் குறித்து வைக்கக் கடமைப்பட்டவராவர்; மக்கட் கணிப்புக் குறித்துப் பொய்க் கணக்கு அளிப்பவர், திருட்டுக் குற்றம் புரிந்தவர் போல் உறுப்புக் குறைபடும் கடுத்தண்டத்