பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
112



திற்கு உள்ளாக்கப்பட்டனர். வாணிக வளர்ச்சி நான்காம் குழுவினர் பால் இருந்தது. விற்பனையை ஒழுங்கு செய்வது முத்திரையிட்டபடி, படிக்கல் முதலா அளவுக் கருவிகளை வழங்குவது, வாணிகம் புரிவார்க்கு வாணிக உரிமைச் சீட்டு வழங்கி அதற்கான கட்டணம் தண்டுவது ஆகிய இவை அக்குழுவின் பணிகளாம். வரி தண்டலை எளிமையாக்குதற்கு பொருட்டு பொருள்களை அவை தோன்றும் இடங்களிலேயே விற்பனை செய்தல்கூடாது பொருளணைத்தும் வாணிக நிலையங்களுக்கு வந்தே விற்பனையாதல் வேண்டும்; விற்கும் பொருள் ஒவ் வொன்றின்மீதும் வரிபெற்றமையைக் காட்டும் அரச இலாஞ்சனை இடப்பெற்ற பின்னரே அவற்றை விற்றல் வேண்டும் என்பனபோலும் விதிமுறைகள் வகுக்கப் பெற்றிருந்தன. வெளிநாடுகளிலிருந்து வாணிகம் கருதி வந்து குவியும் பொருள்களுக்கு, ஐந்தில் ஒரு பங்கு விலை, சுங்கமாக வசூலிக்கப் பட்டது. பழங்கள், காய்கறிகள் போலும் எளிதில் கெடக்கூடிய பொருள்களுக்கு ஆறில் ஒரு பங்கே வரியாக விதிக்கப் பெற்றது. பத்தில் ஒரு பங்கு வரி விதிக்கப் பெறும் உணவுப் பொருள் வகையும் சில இருந்தன. பொன்னும் நவமணியும் போலும் விலை யுயர்ந்த பொருள்களுக்கு விதிக்க் வேண்டிய வரியளவை, அப்பொருள்களின் தரம் அறியவல்லார், அவ்வப்போது அறிந்து விதித்தனர். தொழிற்சாலைகள் ஆக்கி அளிக்கும் பொருள்களின் தரம் குறையாதபடி பார்த்துக் கொள்வதும், அவற்றை அவற்றின் தரத்திற்கேற்பப் பிரித்து வகை செய்வதும்; புதுப் பொருளும் பழம் பொருளும் கலந்து விடாதபடி கண்காணிப்பதும், கலப்பவர்க்குக் கடுந்தண்டம் விதிப்பதும் ஐந்தாங்குழு ஆற்றவேண்டிய பணிகளாம்.வாணிகப் பொருள்களின் விலையில் பத்தில் ஒரு பகுதியை வாணிக வரியாக வாங்குவதும், வரி தர மறுப்பவர்க்கும், விலைகளை மறைத்து விற்பவர்க்கும் கொலைத் தண்டம் கொடுப்பதும் ஆறாங் குழுவின் நீங்காக் கடமைகளாம். -