பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


நகராட்சிக் கழகத்தின் செயல் முறைகள் செந்நெறியில் நடைபெறச் செய்யும் பொறுப்பேற்ற ஆணையாளர் ஒருவர், ஒவ்வொரு நகரிலும் இருந்து வந்தார். நகரின் நல்வாழ்விற்கு அவரே முழுப் பொறுப்பு உடையவராவர். நகராட்சி மன்றத்தின் நடைமுறைகளில் நாட்டம் செலுத்துவதோடு, வாணிக நிலையங்கள், வழிபாடிடங்கள், வங்கம் வந்து தங்கும் கடற்றுறைகள், இவை போலும் பிற பொதுவிடங்கள் ஆகியவற்றைக் காக்கும் கடமையும் அவருக்கிருந்தது. -

மகதப் பேரரசு நான்கு பெரு மாநிலங்களாகப் பிரித்து ஆளப்பட்டது. தலைநகர் பாடலியைச் சூழ்ந்து கிடந்த மத்திய மாநிலம், அரசனுடைய நேரிடை ஆட்சிக் கீழ் இருந்தது. தலைநகர்க்கு வெகு தொலைவில் இருந்த மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்பு. அரசகுடியில் வந்த அரசப் பிரதிநிதிகள் பால் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வட மேற்கு மாநிலம் அல்லது தட்சசீல மாநிலத்தின் தலைநகராகத் தட்சசீல நகரும், மேற்கு மாநிலம் அல்லது மாளவ மாநிலத்தின் தலைநகராக உச்சைனி நகரும், கூர்ச்சரமும், கத்தியவாரும் உள்ளடங்கிய தெற்கு மாநிலத்தின் தலைநகராகக் கிரைனார் நகரும் விளங்கின. நகரங்களிலும், நாட்டுப்புறங்களிலும் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகளைக் கண்ணிமை மூடாது கண்காணித்து, அவ்வப்போது அரசர்க்கு அறிவிக்கும் ஒற்றர்கள் மகத நாடெங்கும் மறைந்து திரிந்து செய்தியறிந்து வந்தார்கள்.

பாடலிபுத்ரத்திற்கும், மகத நாட்டின் பல்வேறு மாநிலத் தலைநகர்களுக்கும் இடையே அகன்று நீண்ட பெரு வழிகள் பல அமைந்திருந்தன, ஏறக்குறைய ஒன்பது பர்லாங்கிற்கு ஒன்றாக நாட்டப்பட்ட உயர்ந்த கல்தூண்கள், வழியளவையும், வழி மாற்றங்களையும் வழி வருவார்க்குக் காட்டி நின்றன. பாடலியிலிருந்து, வடமேற்கு

க-8

க-8