பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


கொள்வது இயலாது. வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்ததே. அந்நாடாண்டிருந்தவர் இம் மூவேந்தர்களே. இவர்கள் ஆட்சிக்காலம், இவ்வாறு அளந்து காண மாட்டா. அத்துணைப் பழமை யுடையதாய் விளங்குவதால் அன்றோ, இவர்களைப் பற்றிப் பேசவந்த பேராசிரியர் இருவரும், “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தகுடி", என்றும், “படைப்புக்காலம் தொட்டு மேம்பட்டு வரும் தொல்குடி” என்றும் கூறி, அவர் தம் பழமையைப் பாராட்டிச் சென்றனர். தமிழ் மொழியின் தலையாய இலக்கண முதல் நூலை இயற்றிய ஆசிரியப் பெருந்தகையாகிய தொல்காப்பியனார் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே, தமிழ் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை இம்மூவேந்தர் ஏற்றிருந்தனர் என்பதும், அக்காலத்திலேயே அவர்கள் தத்தமக்கெனத் தனித் தனிக் கொடியும் மாலையும் கொண்ட பேரரசப் பெருவாழ்வில் பெருக வாழ்ந்திருந்தனர் என்பதும், ஆசிரியர் தொல் காப்பியனார், இத்தமிழகத்தைக் குறிப்பிடுங்கால் “வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்றும், மூவேந்தரைக் குறிப்பிடுங்கால், “போந்தை வேம்பே, ஆர் எனவரும்.உம் மாபெருந்தானையர்” என்றும் குறிப்பிடுதலால் பெறப்படும்.

மூவேந்தர்கள், இராமாயண பாரத காலங்களுக்கு முன்பிருந்தே நனிமிகச் சிறந்த நாகரிக வாழ்வினராய் வாழ்ந்து வந்துள்ளனர். சீதையைத் தேடித், மதன் திசைச் செல்லும் அநுமனுக்குத் தென்திசை நாடுகளின் வரலாற்றினை உணர்த்தும் வானரத் தலைவன் வாயில் வைத்து, கடல் கொண்ட பாண்டி நாட்டின் தலைநகராம் கபாடபுரத்தையும், முத்துக்கள் இழைத்துப் பண்ணிய பொற்கதவுகள் பூட்டிய மாடமாளிகைகளைக் கொண்ட அந்நகரமைப்பின் அழகையும், வால்மீகியார் வாயார வாழ்த்தியுள்ளார். பாரதப் பெரும் போரில் இரு