பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. அரியணை ஏறிய அசோகன்


கதத்தின் அரியணையில் மௌரிய மரபின் இரண் டாவது மன்னனாய் அமர்ந்து அரசாண்ட பிந்துசாரன், தன் வாழ்நாட் காலத்தின் இறுதியில், தன் மக்களுள், தனக்குப் பின் ஆட்சிக்கு வரத் தக்கான் ஒருவனைத் தேர்ந்து இளங்கோவாக்க விரும்பினான். அவனுக்கு மக்கள் பலர் இருந்தனர் என்றாலும், அவர்கள் அனைவரிலும் அசோகனே, ஆளப் பிறந்தவர் பால், அமைய வேண்டிய அரும் பண்புகளை ஆரப் பெற்றிருந்தான். ஆகவே, அவனுக்கே இளங்கோப் பட்டம் சூட்டித் தன் அரசியல் துணைவனாய் ஆக்கிக் கொண்டான்.

இளங்கோப் பட்டம் பெற்ற அசோகன், காஷ்மீரத்தையும், பஞ்சாபையும உள்ளடக்கிய வடமேற்கு மாகாணத்தின் அரசப் பிரதிநிதியாய்ச் சென்று, தன் இளமைப் பருவத்தின் பெரும் பகுதியை ஆங்கே கழித்துக் கொண்டிருந்தான். அம்மாகாணத்தின் தலைநகராய்த் திகழ்ந்த தக்ஷசீலம், அக்காலப் பல்கலைக் கழக நகராய்ப் பெருமையுற்றிருந்தது. கீழ்த் திசை நாடுகளில் சிறந்து விளங்கும் பேரூர்களுள் ஒன்று என்னும் புகழ் பெற்ற அந்நகர், இந்து சமய சாத்திரங்களின் கலைக் கூடமாகவும் காட்சி அளித்தது. அந்தணர், அரசர், அரசர்க்கு நிகராய் அருநிதி படைத்தோர். வணிகர் போலும் வளமார் குடியில் வந்த இளைஞர்கள், இந்திய நுண்கலைகளிலும், விஞ்ஞானத் துறையிலும், சிறப்பாக மருத்துவத் துறையிலும் பயிற்சி பெற, அக்காலத்தில் அப்பேரூர்க்கே செல்வர். அத்தகைய பெருமை வாய்ந்த பேரூரில் பல்லாண்டு இருந்து ஆளும் வாய்ப்பினை இளமைப் பருவத்திலேயே பெற்ற அசோகன். அவ்வருங்கலைகளை ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்து