பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


மன்னன் மாண்டு விட்டான். மன்னனால் இளங்கோவென மதிக்கப் பெற்ற அசோகன், முறைப்படி மகதப் பேரரசின் மன்னனாய் மணி முடி புனைந்து கொண்டான். நிற்க,

பிந்துசாரனுக்குப் பதினாறு மனைவியர் இருந்தனர் என்றும், அவர்கள் வழியாக அவனுக்கு ஆண்மக்கள் மட்டும் நூற்றொருவர் இருந்தனர் என்றும், பிந்துசாரன் இறந்ததும் அவர்களிடையே ஆட்சியுரிமைப் போர் தலை தூக்கிற்று என்றும், அவர்களுள், ஒரு தாய் வயிற்றில் பிறந்த தன் இளவலாகிய திஸ்ஸன் ஒருவனைத் தவிர்த்து ஏனைய உடன் பிறந்தார் அனைவரையும் கொன்று அசோகன் அரசைக் கைப்பற்றிக் கொண்டான் என்றும், அவ்வாட்சியுரிமைப் போர் காரணமாகவே, அசோகன் முடிசூட்டு விழா, மன்னன் மாண்டு நான்காண்டுகள் கழிந்த பின்னர் நடை பெற்றது என்றும் மகாவம்சம் என்ற ஈழ நாட்டு வரலாற்று நூல் கூறுகிறது.

அசோகனுக்குக் கொலைக் குற்றம் சாட்டும் மகாவம்சம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகும். அசோகனுக்குப் பிறகு ஏறக்குறைய ஒன்பது நூற்றாண்டுகள் கழித்துக் தொகுபட்ட அது கூறும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கன அல்ல; மேலும், அசோக வரலாறு கூறும் அது அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த சிறந்த நிகழ்ச்சியாகிய கலிங்க வெற்றி குறித்து வாய் மூடிக் கிடக்கிறது; அவன் ஆட்சி முறை குறித்தும் அது ஏதும் அறிவிக்கவில்லை; இவ்வாறு குறைபட்ட ஒன்று கூறும் சான்றைக் கொண்டு அசோகனைக் குற்றவாளியாக்கி விடுவது கூடாது; மேலும் இளமையில் அவ்வளவு கொடியவனாய் வாழ்ந்தவனே, முதுமையில் அறவழி காட்டும் ஆன்றோனாய் மாறி மாண்புற்றான் என அவன் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்ட புத்த மத வாழ்வைச் சிறப்பிப்பதற்காக அவன் இளமை வாழ்க்கை அவ்வாறு பழிக்கப்பட்டதேயல்லது, அதில் சிறிதும் உண்மையில்லை; மேலும் அரசன்