பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


திறத்துப் படை வீரர்க்கும், அப்போர் முடியுங்காரும் சோறு அளித்துக் காத்தான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்ற சேரர் குலத்தான் எனச் செப்புகின்றன. சங்கத் தமிழ்ச் செய்யுள்கள். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் மகதநாட்டில் தோன்றி, வட நாடு முழுவதிலும் தன் ஆணைசெல. ஆண்ட அரசர்குல அடலேறாகிய அசோகனால் “என் ஆணைக்கு அடங்காது தனியரசு செலுத்தும் பேரரசர் இத்தமிழரசர்” எனப் பாராட்டப் பெற்றுள்ளனர் இம்மூவேந்தர் என்பது, அவ்வசோகன் கல்வெட்டுக்களினாலேயே நன்கு புலனாகிறது. மேலும் தமிழகத்தில், தமிழ் அரசை அழித்துத் தம் அரசை நிலை நாட்டும் நினைப்பினராய் நெடிய தேர்ப்படையோடு தமிழ் நாட்டுள் நுழைந்த மௌரியப் பெரும் படையைத், தமிழகத்து வீரர்கள் முறியடித்த வீரத்தைப் பழந்தமிழ்ப் பாக்கள் பாராட்டிப் பரணி பாடுகின்றன. அம்மட்டோ! கி. பி. முதல் நூற்றாண்டில் நம்நாடு மேலை நாடுகளோடு கொண்டிருந்த வாணிக உறவின் விளைவால், நம் நாட்டிற்கு வந்து சென்ற தாலமி, பிளைனி போன்ற நில நூல் பேராசிரியர்களாலும், அவர் போலும் ஆசிரியர்கள் ஆக்கிய பெரிப்புளுஸ் போன்ற நூல்களாலும் தமிழ் அரசர்கள் மிக மிக உயர்ந்தோராகப் பாராட்டப் பெற்றுள்ளனர்.

சேர, சோழ, பாண்டியர் என்ற அத்தமிழ் அரசர் மூவரும் ஒரு தாய் வயிற்றில் தோன்றிய மூவரின் வழி வந்தவர் என்றும், பண்டு, அவர்கள் நாகரிகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்திருந்தனர் என்றும், பிற்காலத்தில் யாதோ ஒரு காரணத்தால் அவர்களிடையே ஒற்றுமை குலைந்து வேற்றுமை தலை தூக்க, மூத்தோன் வழி வந்தவர் மேற்கு மலைத் தொடர்ச்சியைக் கடந்துபோய் மேலைக்கடற் கரையை வாழிடமாகக் கொண்டனர் என்றும், நடுப்பிறந்தோனாகிய சோழன் வழி வந்தவர் வடக்கு நோக்கிச்