பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. அசோகன் மேற்கொண்ட அருள்நெறி


கலிங்கப்போர், இந் நாடாண்ட முடிமன்னர் எவராலும் அடைய முடியாத ஒரு பெருநிலையை அசோகனுக்கு அளித்தது. “அசோகனுக்கு முன்னும் பின்னும் அரசாண்ட இந்தியப் பேரரசர் எவரும் இவ்வளவு பெரிய நாட்டின் மன்னராய் விளங்கவில்லை” என்ற மங்காப் புகழளித்தது கலிங்கத்தில் அசோகன் பெற்ற வெற்றி. இவ்வாறு அரசியல் துறையில் இந்நாட்டு மன்னர் மன்றத்தின் தலைமையில் அசோகனை அமர்த்தியது அதுவே. உலக அறவோர்களின் அவைத் தலைமையினையும் அவனுக்கு அளித்தது. அவன் வாழ்க்கை முறையையும். ஆட்சி முறையையும் அது அறவே மாற்றி விட்டது; நாட்டு மக்களின் புறநலக் காவலனாய் வாழ்ந்த அசோகனைக் கலிங்க வெற்றி, அவர்களின் அகநலக் காவலனாய் மாற்றி விட்டது. அந்நாள் வரை ஆண்மை, ஆற்றல், மறம், மானம் எனக் கூறி வந்த அசோகன், அந்நாள் தொட்டு அன்பு, அருள், உண்மை, ஒழுக்கம் என்று உரைக்கத் தொடங்கி விட்டான்.

கலிங்கப் போர்க்களத்தின் கொடுமைகளைக் கண்டு அப்பேரழிவிற்குத் தானே காரணம் என்பதை அறிந்து அசோகன் நெஞ்சு நெக்குருகிற்று. உள்ளம் உடைந்தது. செய்த தவறினை எண்ணிச் சிந்தை நொந்தான். ‘என் வாழ்க்கையில் இத்தகைய பேரழிவின் நிலைக்களமாகும் ஒரு பேராசைக்கு இனி ஒரு போதும் அடிமையாகேன்” என்ற உறுதி அவன் உள்ளத்தில் உருப்பெற்றது. கலிங்கப் போர் நடந்து நான்காண்டுகள் கழித்து, “கலிங்கத்தில் என்னால் சொல்லப்பட்டவர், சிறை பிடிக்கப்