பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


பட்டவர்களில் ஆயிரத்தில் ஒருவரை இழக்கவும் இன்று இசையோன் இழக்க நேர்த்தால் ஆறாப் பெருந்துயர்க்கு மீளா அடிமையாவேன்” என்று கூறுமளவு அவன் மனம் பண்பட்டு விட்டது. அது முதல் போர் தரும் புகழை அவன் வெறுக்கத் தலைப்பட்டான். போர் உணர்வே வேர் அற்றுப் போய் விட்டது. “படைக்கலம் ஏந்திப் பெறும் வெற்றி, வெற்றியன்று; அன்பு நெறி அருள் நெறிகள் வழிவரும் வெற்றியே உண்மை வெற்றி; உயர்ந்த வெற்றி” என்று அறிவூட்டத் தொடங்கி விட்டான். அவன் உள்ளமும் மெல்ல மெல்ல புத்த சமயச் சாயல் பெறத் தொடங்கி, இறுதியில் அதுவாகவே ஆகி விட்டது.

கலிங்க வெற்றிக்குப் பிறகு, தன் வாழ்நாள் முழுவதும் புத்த மத ஆசிரியர்கள்பால் அறிந்த உண்மையறங்களைப் பரந்த தன் நாட்டில் அறிவூட்டவும், பரப்பவும், நடைமுறைக்குக் கொண்டு வரவுமே, தன் அரச ஆணை அனைத்தையும் பயன் கொண்டான். ஆட்சிக்கு வந்த இருபத்தி நான்காம் ஆண்டில் புத்தன் பிறந்து, மெய்யுணர்வு பெற்று உலகிற்கு உணர்வூட்டி வாழ்ந்து, உயிர் நீத்த புண்ணிய நகர்களைக் கண்டு வரப் புறப்பட்டான். வடமதுரையில் நறுமணப் பொருள் விற்கும் வணிகர் ஒருவரின் மகனாய்ப் பிறந்து புத்த மதப் பேராசிரியராய் விளங்கிய உபகுப்தா, அசோகனுக்கு வழித்துணையாக உடன் சென்றார். பாடலியிலிருந்து புறப்பட்ட அசோகன், நேர் வடக்கே செல்லும் அரசப் பெருவழியே சென்று இமயப் பெருவரையின் அடிவரையை அடைந்தான். சென்ற வழி நெடுக, தன் வருகையின் நினைவுச் சின்னங்களாக ஒற்றைக் கல்லால் ஆன உயர்ந்த பெரிய கற்றுாண்களை நிலைநாட்டிச் சென்றான். இமயப் பெருவரையடைந்த அசோகன், அதைக் கடவாமல், மேற்கு நோக்கி நடந்து, மாயாதேவி புத்தனை ஈன்ற பெருமை மிக்க லும்பினிச் சோலையை அடைந்தான். ஆங்கு உபகுப்தர்,



க-9