பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

 அசோகனை நோக்கி, “அரசே! இங்குதான் நம் அருட் பெரியோன் தோன்றியருளினான்” என்று கூறிய உரைகள் பொறிக்கப் பெற்ற ஒரு தூண், அசோகன் வருகையின் நினைவுச் சின்னமாய் ஆங்கு இன்றும் நிற்கிறது. அதை நாட்டிவிட்டு ஆங்கிருந்து புறப்பட்ட அசோகன், புத்தன் தன் பிள்ளைப் பருவத்தில் ஆடியும் பாடியும், அருங்கலை பயின்றும் வாழ்ந்த கபிலவாஸ்து நகரடைந்து களிப்புற்றான். சில நாள் கழித்து, தான் அறிந்த உண்மைகளைப் புத்தன், உலகத்தவர்க்கு முதன் முதலாக உணர்த்தத் தொடங்கிய தொல்பெரும் சிறப்பு வாய்ந்த சார்நாத் சென்று சேர்ந்தான். காசி மாநகர்க்கு அணித்தாக இருந்த அந்நகரில், சிந்தை மகிழச் சில நாள் இருந்து விட்டுப் புத்தன் பல்லாண்டு வாழ்ந்த பெருமை வாய்ந்த புண்ணிய் நகராகிய ஸிராவஸ்தியை அடைந்தான். அந்நகரைக் கண்ணுற்று அகமகிழ்ந்த அசோகன், ஆங்கிருந்து, புத்தன் அறியாமை யிருளின் நீங்கி மெய்ஞ் ஞானவுணர்வு பெற்ற போதிமரம் நிற்கும் கயை நகர் சென்று கண்டு களி கூர்ந்தான். கடைசியாகப் புத்தன் வாழ்வால் பெருமையுற்ற அவ்விடங்களின் நல்வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் துணை செய்யும் அரும் பெரும் கொடைகள் பல அளித்து, அவ்வாறு அளித்த்தை அறிவிக்கும் தன் அரச ஆணைகள் பொறித்த கற்கம்பங்களை ஆங்காங்கே நாட்டி வைத்தான்; அவற்றை நாட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும், அவை இன்றும் அழிவுறாமலே நிலை பெற்றுள்ளன.

புத்த சமயச் சார்புடைய இடங்களுக்குத் திருவருட் பயணம் மேற்கொண்டு சென்ற அசோகன், அவ்வாறே நேபாள நாட்டிற்கும் சென்றிருந்தான். தன் வருகையை நினைவூட்டும் வகையில், நேபாளப் பள்ளத்தாக்கில் லலித பாதன் என்ற பெயரில் புதிய தலைநகர் ஒன்றை அமைத்தான், நேபாளத்தின் இன்றைய தலைநகராய்த் திகழும்