பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132


மனையின் ஒரு வேளை விருந்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றவன், ஒரு நாளைக்கு ஒரு மான், இரண்டு மயில்கள் மட்டுமே கொல்லப்படுதல் வேண்டும் என ஆணையிட்டான்; அதுவும் நாளடைவில் அறவே நிறுத்தப்பட்டது. பாட்டன் சந்திரகுப்தன் காலத்தில் அரண்மனைப் பெருவிழாவாக மதித்துக் கொண்டாடப் பெற்ற வேட்டை விழாவை நிறுத்தி விட்டான். “வேந்தர்கள், விளையாட்டு வேடிக்கைகளில் விருப்பமுடையவராய் உலா வரும் பண்டை வழக்கம் கை விடப்படும்; இனி, அவர்கள், நாட்டு மக்களின் நலன் காணவும், அருட் பெரியார்களைக் கண்டு அவர்க்கு வேண்டுவன அளிக்கவும், அருள் நெறி முறைகளை ஆராய்ந்து, அவற்றை மக்களுக்கு அறிவிக்கவும், வேண்டிய அரண்மனைப் புறம் போவர்” எனப் பறை சாற்றி அறிவித்தான். நாளடைவில், அக்கொல்லாமை அறம் நாட்டின் சட்டமாகவும் ஆக்கப்பட்டது. அதன் பயனாய் எண்ணற்ற கோடி உயிர்கள் கொலையுண்டு போகாது காப்பாற்றப் பட்டன; நாட்டு மக்களில், புலால் தவிர்த்துப் புறவுணவு உண்டறியாத மக்களும் உள்ளனர் என்பதை அறிந்தவனாகிய, அசோகன், அவர்க்கு மட்டும் விலக்களித்திருந்தான் என்றாலும், ஒர் ஆண்டில் ஐம்பத்தாறு நாட்களைக் குறிப்பிட்டு, அந்நாட்களில், அவர்களும் கொல்வதோ, புலால் உண்பதோ கூடாது என்று ஆணையிட்டிருந்தான். கொல்லாமையறத்தை வலியுறுத்தும் அரச ஆணையைச் சிறிதும் வழுவாது காக்கும் கருத்துடையனாய், அதற்கெனச் சில அரசியல் ஆணையாளர்களை நியமித்திருந்தான். கொல்லாமையறம் மேற்கொண்ட மௌரியக் கோமகன், விலங்குகள், கொடுநோயால் கொலையுண்டு போவதையும் போக்க விரும்பினான்; அதற்காக நாடெங்கும் விலங்குகளுக்கான மருத்துவ, நிலையங்களை நிறுவினான். அகமதாபாத்திலும், சூரத்திலும் இன்று உள்ள மருத்துவ நிலையங்கள், மௌரிய மன்னன் நிறுவியனவேயாகும்; சூரத் நகரில் உள்ள கால்