பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


யாதலின், புறத் தோற்றத்தில் அவை எவ்வளவுதான் மாறுபடுவனவாகத் தோன்றிலும், உண்மையடிப்படையில் ஒத்த இயல்புடையவேயாம் என்பதை அறிந்து, பிற சமய நெறிகளையும் மதித்து, அவை இனிது நடைபெறத் துணை புரியும் சமரச நோக்குடையராதல் வேண்டும் என்பதை அறிவுறுத்தினான். பாறைக் கல்வெட்டு அரச ஆணை வரிசையுள் இரண்டாவது ஆணை, “ஒருவன் தன் மதத்தைப் புகழ்ந்து, பிறர் மதத்தைப் பழித்தல் கூடாது; பிற மதங்களும் யாதேனும் ஒரு வகையால் பாராட்டத் தக்க பண்புடையனவே. இதை அறிந்து நடந்தால், ஒருவன் தன் மதத்தையும் உயர்த்தியவனாவன்; பிற மத வளர்ச்சிக்கும் துணை புரிந்தவனாவன்; இதற்கு மாறாக நடந்து கொள்பவன், தன் மதத்திற்கும் மாசூட்டி, பிற மதங்களையும் பாழ் செய்தவனாவன். தன் மதத்தை உயர்த்த வேண்டிப் பிற மதங்களைப் பழித்துப் பேசுபவன். உண்மையில், அவ்வாறு பழிப்பதால், தன் மதத்திற்குத் தானே கேடு விளைக்கின்றான்; ஆகவே, பிற மதத்தவர்க்குப் பொன்னும் பொருளும் போல்வன அளிக்கும் புறச் செயல்களால் சமரச நிலை ஏற்பட்டு விடாது; பிற மதங்களையும் தம் மதமே போல் மதிக்கும் பண்பாடு வளர்தல் வேண்டும்; அதுவே உண்மைச் சமரச நிலைக்கு வழித்துணையாம் என்று மாண்புமிகு மன்னன் மதிக்கின்றான்” என்று கூறுகிறது.

சமரச நிலை வளரவேண்டும், வாழ வேண்டும் என்று ஆணையிடும் அசோகன், தான் மேற்கொண்ட அறங்களுள் தலையாயது கொல்லாமை அறமாகவும், தன் உயிரைத் தாமே பலி கொடுக்கும்,கொடுந்தவ நெறி நிற்கும் ஒருசார் துறவிகளுக்கும் பெருங்கொடை வழங்கியும், புலால் உண்ணாமையாகிய உயர்ந்த அறவழி நிற்கும் தன் ஆட்சியிலும், புலால் உண்டு உயிர் வாழும் இனத்தவர்க்கு அவ்வுரிமையை மறுக்காது வழங்கியும், அச்சமரச நெறியில் வாழ்ந்தும் காட்டினான்.