பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
136



ஈதலின் சிறப்பை அறிந்தவன் அசோகன்; வறி யோர்க்கு வழங்கி வாழவேண்டும்; அற்றார் அழிபசி தீர்த்தல் வேண்டும். அரசன் கடமைகளுள் அதுவும் ஒன்று என்பதை அவன் அறிவான்; ஈதலும், இசைபட வாழ்தலுமே உயிர்க்கு ஊதியங்களாம் என்பது உண்மையே என்றாலும், உணவளித்து உடற்பசியைப் போக்குவது உண்மை ஈகை ஆகாது; அறிவு வழங்கி அறிவுப் பசியைப் போக்குவதே, ஈகையாம்; அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதைக் காட்டிலும், ஆங்கு ஒர் ஏழைக்கு அறிவூட்டுதலே சிறந்த அறக்கொடையாம் என்று கருதினான் அசோகன்; ‘'உணவளிப்பது உயர்ந்த கொடையாக ஏற்றுக்கொள்ளப் பெறினும், சிறந்த அற நூல்கள், அறிவிலாதவர்க்கு, அருளற நெறிகளை அறிவிப் பதுபோலும் கொடை உலகில் இல்லை; அருளற நெறியுணர்வைப் பகிர்ந்தளிப்பதுபோல் ஆகாது, பொன்னையும் பொருளையும் பகிர்ந்தளிப்பது’ என்று கூறுகிறது, அசோகன் அரச ஆணைகளுள் ஒன்று.


அக்காலச் சமயச் சடங்குகளையும், அரண்மனைப் பெரு விழாக்களையும் கண்டு வெறுத்தவன் அசோகன்; பிறந்த நாள் விழா முதல், நினைவு நாள் விழாவரை ஒருவரின் வாழ்நாளில் வந்து வந்து செல்லும் விழாக்களையும், அவற்றிற்காக பெரும் பொருள் செலவையும் கண்டு சிந்தை நொந்த அசோகன், வினைகளும் விழாக்களும் சிறு பயன் அளிப்பன; பிழையாது பயனளிக்க முடியாதன; உண்மையான கொடை அறம், ஒருவன் தன்னுடன் வாழ்வார்க்கு அருள் நெறி அறத்தை அறிவூட்டு வதில் நிற்பதுபோல், உண்மையான வினைகளும் விழாக்களும், அறிந்த அருளற நெறிவழி நடந்து காட்டுவதில் நிற்கின்றன; அடிமைகளையும், பணிபுரிவாரையும், அன்போடு நடத்துதல், ஆசிரியர்களை வழிபடுதல் பிற உயிர்களை மதித்துப் பேணுதல், அறவோர்களுக்கும், அந்தணர்களுக்கும் உரிமை அளித்தல் ஆகிய இவையே