பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


அருளற நெறி கண்ட அசோகன், அவ்வுணர்வும் ஊக்கமும் ஆட்சித் தலைவனாகிய தனக்கு மட்டும் போதாது; அதனால் கருதிய பயன் கை கூடாது; அவ்வுள்ளம் தன் ஆட்சிக் கீழ்ப் பணி புரியும், ஆணையாளர் அனைவரிடத்தும் அமைதல் வேண்டும். ஆகவே அவ்வுள்ளம் உடையாரையே ஆணையாளர்களாக அமர்த்துதல் வேண்டும்; அவ்வுள்ளம் அவர்கள் பால் இயல்பாக அமைந்து கிடப்பினும், அவ்வுணர்வினை அவ்வப்போது ஊக்கிக் கொண்டேயிருத்தல் வேண்டும் என்று கருதினான். அதனால், தான் மேற்கொண்ட அருளற நெறிமுறைகள், அவற்றைச் செயற்படுத்த வேண்டிய செயல் முறைகள், அவற்றைச் செயற்படுத்தும் ஆணையாளர்களின் கடமைகள் ஆகியவற்றை, அரச ஆணைகளாக அவ்வப்போது அறிவித்து வந்தான். அவர்கள், தங்கள் கடமைகளை ஆர்வத்தோடு ஆற்ற, அவர்க்கு உரிமை பலவும் வழங்கினான். தம் ஆட்சிக்குட்பட்ட மக்களுக்கு மனம் நிறை வாழ்வையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் வகையில், நல்லது புரிந்த மக்களுக்கு, நன்மை பல வழங்கியும், அல்லன புரிந்தார்க்கு அவர் திருந்தத் தண்டம் அளித்தும் தம் கடமைகளை நம்பிக்கையோடு, அச்சம் அற்றுச் செய்து வருவான் வேண்டி, “என் ஆட்சிக்குட்பட்ட மாகாணத் தலைவர்களுக்கு உரிமை பல வழங்கியுள்ளேன். ஒருவன், தன் குழந்தையை அறிவறிந்த ஒரு செவிலி பால் ஒப்படைத்து, “அன்பும், ஆர்வமும், அறிவும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இச்செவிலி, என் மகவின் மகிழ்ச்சியில், மாறாகக் கருத்துடையள்” எனத் தனக்குள்ளே சொல்லி அமைதி பெறுவது போல், யானும், என் மக்களின் நல்வாழ்வில் ஆர்வமும் ஊக்கமும் மிக்காரையே மாகாணத் தலைவர்களாகத் தேர்ந்துள்ளேன். அவர் ஆட்சிக் கீழ் என் மக்கள் நல்வாழ்வு வாழ்வர் என்று கூறி அமைதி காண விரும்புகிறேன்” என்றும், “என் ஆட்சிக் கீழ் வாழும் மக்கள் அனைவரும், என் வயிற்றிற் பிறந்த மக்களே! என் மக்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகில் நன்கு