பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


வாழ்ந்து மறுவுலகில் நன்னிலை பெறவேண்டும் என்பதில் எனக்கு எவ்வளவு ஆர்வம் உண்டோ, அவ்வளவு ஆர்வம் என் நாட்டு மக்களின் நல்வாழ்விலும், உண்டு. ஆகவே, மதிப்பு மிக்க மாகாணத் தலைவர்களே! நீங்கள் உங்கள் ஆட்சிக் கீழ் உள்ள மக்களை என்னை நம்பும்படியும், “அரசன் நமக்குத் தந்தை போல்வான். அவன் தன் பால் அன்பு காட்டுவது போலவே, நம்மீதும் அன்பு காட்டுகின்றான்; ஆகவே, அவன் மக்கள் அவன் பால் அன்பு காட்டுவது போல் நாமும் அவன் பால் அன்பு கொள்ளுதல் வேண்டும்” என்று உணர்வு பெறும்படியும் ஆட்சி புரிதல் வேண்டும்; அவ்வாறு பணி புரிந்தால், நீங்கள் மறுமையில் வீட்டுலக வாழ்வு பெறுதலோடு, இம்மையில் அரசனுக்கு, ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றிய பெருமையும் பெறுவீர்கள்” என்றும், “முறையும் தண்டமும், எவர்க்கும், எங்கும், எக்காலத்தும் ஒரு நிகரானவாதல் வேண்டும்; அதற்காக, இன்று முதல் இதுவே என் ஆணையாம்; கொலைத் தண்டம் பெற்றுக் கொடுஞ்சிறையில் வாழ்வார்க்கு,அத்தண்டம் நிறைவேற வேண்டிய நாளிலிருந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கின்றேன். இம்மூன்று நாட்களில், தண்டம் பெற்றவரின் உறவினர், வழக்கை மீண்டும் விசாரித்துக் குறை தண்டம் தண்டம் விதிக்க வேண்டிக்கொள்வதும், ஏழைகளுக்கு உணவளித்து மறுமையில் நல்வாழ்வு பெற ஆண்டவனை வேண்டிக் கொள்வதும், உயர்கதி அடைய உண்ணா நோன்பு மேற் கொள்வதும் செய்வார்களாக. இவ்வாணையை வெளியிடுவதன் நோக்கம், ஒருவர் வாழ்நாளின் முடிவு மாற்ற முடியாத வகையில் உறுதி செய்யப்பட்ட நிலையிலும், அவர்கள் மறுமையில் இன்பம் அடைய வழி செய்து கொடுத்தல் வேண்டும்; அது காணும் மக்களிடையே, தன்னடக்கம் விட்டுக் கொடுத்தல் போலும் நல்லியல்புகள் இடம் பெறவும் வழி காணுதல் வேண்டும் என்பதே” என்றும் அவன் ஆணை அறிவிக்கும் கல்வெட்டுச் செய்திகள் அவன் ஆட்சி நலத்தை அறிவிக்கின்றன.