பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தமிழரசுகளை அலைக்கழிக்கத் தொடங்கினர். இயல்பாகவே உரம் இழந்திருந்த சோழ நாடு, களப்பிரரின் வெறியாட்டத்திற்கு இடனாகி இடர் உற்றது. சோழர் தாழ்நிலை உற்றனர். காவற் சிறப்பு அமைந்த உறையூரையும், கடல் வாணிக வளம் கொழிக்கும் காவிரிப்பூம் பட்டினத்தையும் கைவிட்டுப் பழையாறை நகர் புகுந்து நலிவெய்திக் கிடந்தனர் பல நூறு ஆண்டுகள் வரை.

சங்ககாலச் சோழர் பேரரசின் தொடக்கக் காலத்திற்கும், விசயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர் பேரரசின் தொடக்கக் காலத்திற்கும் இடையில் எழுநூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்நீண்டகாலம் முழுவதும் சோழர் தலைமறைவாகவே வாழவேண்டியவராயினர். தமிழகத்தின் அரசியல் அமைதியைக் குலைத்துக் கொடுங்கோல் புரிந்து வந்த களப்பிரர் ஆட்சி, கி. பி. ஆறாம் நூற்றாண்டு வரையும் அழிக்கலாகா ஆற்றல் பெற்று விளங்கிற்று. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் ஆட்சியும் அழியத் தொடங்கிவிட்டது. ஆயினும், தம் ஆட்சி அழிவிற்குக் காரணமாய் இருந்த களப்பிரர் அழிந்துபோனதும், சோழர் ஆட்சி தலை தூக்கவில்லை. களப்பிரர் வென்று துரத்தப்பட்டனர் என்றாலும், அவரை வென்று துரத்திய அப்பணியை மேற்கொண்டவர் சோழர் அல்லர். அதைப் பல்லவரே முதற்கண் மேற்கொண்டனர். அவரைத் தொடர்ந்து பாண்டியரும் அதை மேற்கொண்டனர். களப்பிரரை வெற்றி கண்ட பல்லவரும் பாண்டியரும் சோணாட்டிற்கு வடக்கிலும் தெற்கிலும் அரசமைத்து வளரத் தொடங்கிவிட்டனர். ஆற்றல் மிக்க அரசன் எவனையும் பெறாமல், நானூறு ஆண்டுகளாக வலியிழந்து வாழ்விழந்து கிடக்கும் சோழரால், புதிய உரத்தோடு பேரரசு அமைத்து வளர்ந்து வரும் பல்லவ பாண்டியர்க்கிடையே வளர்ந்து வாழ்வு பெறுதல் இயலாதாயிற்று. அதனால் மேலும் சில ஆண்டுகள் அடங்கி வாழவேண்டியவராயினர். அவ்வாறே சில நாள் பல்லவ