பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

ரோடும் சில நாள் பாண்டியரோடும் உறவும் நட்பும் கொண்டு உயிரோம்பி வந்தனர்.

“காலம் கருதி இருப்பர், கலங்காது ஞாலம் கருதுபவர்” என்றார் வள்ளுவப் பெருந்தகையார். தம் ஆற்றலை நிலைநாட்டித் தனியரசு அமைக்க வேண்டும் என்ற ஆசை சோழர் குலத்தவரின் உள்ளத்தைவிட்டு அகலவில்லை. பல்லவப் பாண்டியப் பேரரசுகளின் புத்தம் புதிய பெருவாழ்வைக் காணும்போதெல்லாம், அவ்வாசை அவர்கள் உள்ளத்தில் ஓங்கி வளர்ந்து கொண்டேயிருந்தது. அதனால் அவ்வாசையை நிறைவேற்றிக் கொள்ளற்கு வாய்ப்புடைய காலத்தை எதிர் நோக்கியிருந்தனர். அதற்கேற்ப, அந்நற்காலம் அவர்களை அணுகுதற்கு ஏற்ற சூழ்நிலையும் மெல்ல உருவாகத் தலைப்பட்டது.

பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் இடையே பேரரசுப் போட்டி எழுந்துவிட்டது. அதன் பயனாய் இரு பேரரசுகளும் ஓயாது போரிடத் தொடங்கிவிட்டன. தமிழ் நாட்டின் தலை எழுத்து எந்தப் பேரரசையும் இருநூறு ஆண்டுகளுக்குமேல் வாழவிடுவதில்லை. அந்நிலை பல்லவ பாண்டிய அரசுகளுக்கும் உண்டாகிவிட்டது. அவர்களும் இருநூறு ஆடுைகள் அரசமைத்து வாழ்ந்து விட்டனர். மேலும் பேரரசுப் போட்டி காரணமாய் மேற்கொண்ட ஓயாப் போர்களால் அவ்விரு பேரரசுகளின் ஆற்றலும் அழிந்து கொண்டே வந்துவிட்டது.

நாடாளும் வேட்கை, நாள்தோறும் ஒவ்வொரு நிலையாக உரம் பெற்று உயர, அதற்கேற்ற காலத்தை எதிர் நோக்கி அடங்கியிருந்த சோழர், இவற்றையெல்லாம் ஊன்றிக் கவனித்துக் கொண்டே வந்தனர். தனியர சமைத்து வாழ வேண்டும் என்பதில் அவருக்குள்ள தளரா ஆர்வம், அதற்கு வாய்ப்புடைய காலமும் நிலையும்