பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தாமாகவே வருக என எண்ணி வாளா இருந்துவிட அவர்களை விட்டிலது. வரும் அவ்வாய்பை விரைந்து வரச்செய்வதற்கு ஏற்றனவற்றை அவர்களும் மேற்கொண்டனர். சூழ்நிலைக்கேற்ப, சிலகாலம் பாண்டியரோடு கூடிப் பல்லவர் ஆற்றலைக் குறைத்தனர். சில காலம் பல்லவரோடு கூடிய பாண்டியரோடு போரிட்டு அவர் ஆற்றலைக் குன்ற வைத்தனர். அதனால் அவர்கள் எதிர்நோக்கியிருந்த நற்காலமும் விரைந்து வந்து சேர்ந்தது. அதைப் பயன்கொண்டு பிற்காலச் சோழர் பேரரசை நிலைநாட்டிய முதல்வன் விசயாலயன் எனும் விழுமியோனாவன்.

விசயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர் பேரரசிற்குக் கால்கோள் இட்ட காலம், கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். அக்காலை, சோழர் குலத்தவர் பழையாறை நகரில் வாழ்ந்திருந்தனர் என்றால், அச்சோழர்க்கு உரிமையுடையதான தஞ்சை மாநகரில் முத்தரையர் என்பார் அரசோச்சியிருந்தனர். அவர்களும் சோழரைப் போலவே, ஒருகால் பாண்டியர்க் கும்,மற்றொருகால் பல்லவர்க்கும் படைத்துணை அளித்து வாழ்ந்து வந்தனர். கி. பி. 846-ல் விசயாலன் அம்முத்தரையரை வென்று, பண்டு தன் குல முதல்வர் இருந்து கோலோச்சிய தஞ்சையைக் கைப்பற்றிக் கொண்டான். விசயாலன் முயற்சிக்கு அக்காலை அரியணையில் அமர்ந்திருந்த பல்லவனும் துணை நின்றான். விசயாலயன் முன்னோரின் கனவு நினைவாகிவிட்டது. சோணாட்டின் ஒரு பகுதி மீண்டும் சோழர் உடமை ஆயிற்று. சோழர் பேரரசு மீண்டும் நிறுவப்பட்டது.

பிற்காலச் சோழர் பேரரசு, கி. பி. 846-ல் நிறுவப்பட்டது. எனினும், அழிக்கலாகா ஆற்றல் மிக்க அரசாக அது அந்நாளிலேயே அமைந்துவிடவில்லை; அந்நிலை அதற்குக் கி.பி. 880-லேயே வாய்த்தது. அது, அவ்வாண்