பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வன் இவ்வாதித்தன். விதை முளைத்துச் செடியாகி வளரத் தொடங்கிவிட்டது. ஆயினும் அதன் அருகே பல்லவன் என்ற மரம் இன்னமும் பட்டுப் பேகாமல் நிற்பதைக் கண்டான்; செடி வளமாக வளர வேண்டுமேல், அதைத் தடை செய்யும் நிழல் தரும் மரம் எதுவும் அதன் அருகே நிற்றல் கூடாது என்பதை உணர்ந்தான்; உடனே, அப்பல்லவன் மீதே பாய்ந்தான்; ஆண்டு முதிர்ந்து இயல்பாகவே அழிந்துபோகும் நிலையுற்றிருந்த அப்பல்லவனும், ஆதித்தனை எதிர்த்து வெல்லமாட்டாது இறந்தான். சோழ மண்டலத்திற்குத் துணையாயிற்று தொண்டை மண்டலம். ஆதித்தனின் ஆற்றலையும், அவனால் பல்லவப் பேரரசு முடிவுற்றதையும் கண்ட சேர மன்னன் தாணுரவியும், கங்க நாட்டுக் காவலன் பிருதிவிபதியும் ஆதித்தனோடு நட்புறவுபூண்டு நல்லவர்களாக வாழத் தொடங்கினர். சோழ மண்டலமும் தொண்டை மண்டலமும் அடங்கிய ஒரு பேரரசை நிலைநாட்டிய ஆதித்தன், அந்நாட்டின் செல்வவளத்தைப் பெருக்கும் கருத்துடையனாய்ப் பொன் வளம் மிக்க கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டு அரசர் பலரையும் வென்று, அந்நாட்டில் குவிந்து கிடந்த பொன்னை வாரிக் கொண்டு வந்து சேர்த்தான். ஒரு பெரிய நாட்டையும் கண்டு, அந்நாட்டிற்கு வளத்தையும் அளித்த பின்னர், அவன் உள்ளம் தெய்வத் திருப்பணியில் சென்றது. திருப்புறம்பயப் போரில் பெற்ற வெற்றியே, சோழர் ஆட்சிக்கு அடி கோலிற்று என்பதை அறிந்தவனாதலின், ஆதித்தன், அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு அழகிய கற்கோயில் ஒன்றைக் கட்டிச் சிறப்பித்தான்; தங்கள் சோழர்குலக் கடவுளாய் நடராசப்பெருமான் வீற்றிருக்கும் தில்லைச் சிற்றம்பலத்தின் முகட்டினைக் கொங்கு நாட்டிலிருந்து கொணர்ந்த பொன்னால் பொன்மயமாக்கினான். அம்மாட்டோ! காவிரியாற்றின் இரு கரையிலும் உள்ள எண்ணற்ற சிவன் கோயில்களெல்லாம் செங்கல்லால் கட்டப்பெற்றுள்ளமையால், கால வெள்ளத்தால் அழிந்து