பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

போகும் என அறிந்து, அவற்றுள் பலவற்றைக் கற்றளி களாக மாற்றிக் களி கூர்ந்தான். ஆதித்தனின் இச் சிவத் தொண்டினை, நம்பியாண்டார் நம்பிகள் தாம் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் பலமுறை பாராட்டியுள் ளார். அவற்றுள் ஒன்று:

“சிங்கத் துருவளைச் செற்றவனை; சிற்றம்பல முகடு  
கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்.'

முதற் பராந்தகன் : ஆதித்தன் மகனாகிய பராந்தகன் அரியனை யேறுங்கால், வடக்கே வேங்கடம் வரை பரவிய தொண்டை மண்டலமும், கொங்கு மண்டலமும், சோழ மண்டலமும் உள்ளிட்ட ஒரு பேரரசு அவன்பால் ஒப்படைக்கப்பட்டது. தன் குல முதல்வர் தனியரசு அமைத்து வாழத் தடையாக இருந்த பல்லவ பாண்டியர் இருவரில், பல்லவர் ஆட்சி அறவே அழிந்து போக, அவர் ஆண்ட தொண்டைநாடு தன் நாட்டோடு இணைந்துவிட்டது. ஆகவே தன்னாட்டின் வடவெல்லை வலுப்பட்டு விட்டது. ஆனால் அந்நிலை தெற்கே ஏற்பட்டிலது. திருப்புறம்பயப் போரில் பாண்டியன் தோற்றுவிட்டான். என்றாலும் அவன் ஆட்சி அறவே அழிந்துவிடவில்லை. என்றேனும் ஒருநாள், அவன், தன் நாட்டின் மீது பாய்தலும் கூடும்; ஆகவே பாண்டிய நாட்டையும் அகப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதுதான் அமைதியாக இருத்தல் இயலும் என உணர்ந்தான் பராந்தகன். உடனே சோழர் பெரும்படை பாண்டி நாடு புகுந்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டது. மதுரை வீழ்ந்து விட்டது; ஆனால் மதுரை மன்னன் பணிந்து விட்டானல்லன். பாண்டியன், ஈழ நாட்டரசனை வேண்டிப் பெற்ற படைத் துணையோடு பராந்தகனை மீண்டும் வந்து தாக்கினான். ஆயினும் அப்பொழுதும் தோல்வியே கண்டான். பராந்தகனை வெல்வது இனி இயலாது என்பதறிந்து கொண்ட கூடற்கோ, தன் குலத்தவர்க்குரிய மணிமுடியையும் வேறு பிற அரசச்