பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

நாட் காலத்திலேயே வலியிழந்துவிட்டது. தெற்கே சோழப் பேரரசு தலை தூக்கத் தொடங்கிய காலத்தில், வடக்கில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் இராஷ்டிரகூடர் என்பவரும் பெருக வாழ்ந்திருந்தனர். வளரும் தன் குலத்தவர்க்கு அவர்கள் பகை ஆகாது என அறிந்தே, ஆதித்த சோழன் அக்குலக் கன்னியொருத்தியை மணந்து அவர்களோடு உறவு கொண்டிருந்தான். அந்த அரசியல் அறிவில் பராந்தகன் குறைந்தவனல்லன். தன் மகள் ஒருத்தியை அக்குல இளவரசன் ஒருவனுக்கு அவனும் மணம் செய்து தத்திருந்தான். ஆனால், அதுவே அவன் அரசழிவிற்கு அடிகோலுவதாய் ஆகிவிட்டது.

பராந்தகன் மகளை மணந்த அம்மன்னன் மதிவலி இழந்து மக்கள் வெறுக்க வாழ்ந்தான். அஃதறிந்த அவன் சிறிய தந்தையும், அவன் மகனும், அவனுக்கு எதிராகப் படையெடுத்து, அவனை அரியணையிலிருந்து வீழ்த்திவிட்டார்கள். அரசிழந்த இளவரசன் சோணாடு வந்து மாமன்பால் அடைக்கலம் புகுந்தான். மருமகனுக்கு நேர்ந்த மானக்கேட்டைப் போக்கி, அவனை மீண்டும் மன்னனாக்கத் துணிந்தான் பராந்தகன். சோழர் படை இராஷ்டிரகூட நாடு சென்று போரிட்டது. ஆனால் முடிவு வேறாயிற்று. சோழர்க்குத் தோற்று நாடிழந்து கிடக்கும் வாணர்களும், வைதும்பர்களும் இராஷ்டிரகூடர் பக்கம் நின்று போரிட்டனர். அதனால் அவர் கை வலுத்தது. சோழர் கை சிறுத்தது. சோழர் தோற்றனர்.

தோல்வியோடு சோணாடு திரும்பிய பராந்தகன், தன் வடவெல்லையில் பகைவர் வலுத்துவிட்டனர்; எந்நேரத்திலும் அவர்கள் தன்னாட்டின்மீது போர் தொடுப்பர் என அறிந்து, திருமுனைப்பாடி நாட்டுத் திருக்கோவலூரில், ஒரு பெரிய படையைத் தன் மக்களுள் ஆற்றல் மிக்கான் ஒருவன் தலைமையில் நிறுத்தி வட வெல்லையைக் கண்காணித்து வந்தான். பராந்தகனின் இப்படை விழிப்பை அறிந்த இராஷ்டிரகூட வேந்தன்,