பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தன் படை வலியைப் பெரும் போருக்கு ஏற்பப் பெருக்குமளவும் காத்திருந்தான். அது நிறைவேறியதும் சோணாடு நோக்கிப் புறப்பட்டான். அஃதறிந்த சோழர் படையும் வடநாடு நோக்கிச் சென்றது. தக்கோலத்தில் இரு திறப்படைகளும் எதிர்ப்பட்டு அருஞ்சமர் புரிந்தன. வெற்றி சோழர்க்கு வாய்க்கும் தறுவாயில், யானை மேல் அமர்ந்து கொண்டிருந்த சோழர் குல இளவரசன் அம்பொன்று பாய்ந்து இறந்து போனான். படைத் தலைவன் இறக்கவே படைவீரர் சோர்ந்து போயினர். இராஷ்டிரகூடப் படை வெற்றி பெற்றது. தொண்டை நாடளவும் அவர் ஆட்சிக்கீழ்ப் போய்விட்டது. சோணாட்டெல்லை சுருங்கி விட்டது.

அரும்பாடுபட்டுத் தான் அமைத்த பேரரசு தன் கண் முன்னரே அழிந்தமை கண்டு கலங்கினான் பராந்தகன். பின்னர் ஒருவாறு உள்ளம் தேறி, உள்ள சிறு நாட்டில் நல்லரசு நிலவ வேண்டும் எனும் நினைவினனாய்த் தன் இளைய மகன் கண்டராதித்தனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி ஆட்சிப்பொறுப்பை அவன் பால் ஒப்படைத்தான். தன் இறுதி aநாளை இறையன் பில் கழிக்க எண்ணினான். தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் ஓடுகளால் மூடி இறவாப் புகழ் பெற்றான். பலரும் அவனைப் புகழ்ந்து பாராட்டினார்கள். அப்புகழ் உரைகளுள் ஒன்று :

“கோதிலாத் தேறல் குனிக்கும் திருமன்றம் 
காதலால் பொன்வேய்ந்த காவலன்.”

கண்டராதித்தன் : சோழர் பேரரசு மேலும் சீர் குலைதல் கூடாது எனும் கருத்தையுட்கொண்டே பராந்தகன், கண்டராதித்தனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, ஆட்சிப் பொறுப்பை அவன்பால் ஒப்படைத்தான்; ஆனால் கண்டராதித்தன்பால் அவன் எதிர்பார்த்த அரசியல் ஆற்றல் அமையவில்லை. அவன் மனம் அரசியல் துறையினும், அறத்துறையிலேயே ஆழப்பதிந்துவிட்டது. நாடாளும் அரசன்பால் இவ்வரசியல் குறைபாடு