பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27

குறைவின்றி அமைந்திருந்தன. மேலும், இவனை இளமையில் வளர்த்தவர்களாகிய கண்டரதித்த தேவனின் மனைவியாகிய செம்பியன் மாதேவியும், இவன் தமக்கையாராகிய குந்தவை பிராட்டியாரும், இறையன்புக்கும், இறவாப் பெருங்குணங்களுக்கும் உறைவிடமாகிய பெருந்தகையினராவர். ஆதலின்-அவர் வளர்க்க வளர்ந்த அருண்மொழித்தேவன்பால் ஆன்றோர் போற்றும் அத்துணை ஒழுக்கங்களும் ஒன்றி நின்றன. அதுவே, அவனை உலகப் பேரரசர்களுள் ஒருவனாக வைத்து மதிக்கத்தக்க மாண்பினை அளித்தது.

பிற்காலச் சோழர் வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிவன அச்சோழ அரசர்களின் கல்வெட்டுக்களில் காணும் மெய்க்கீர்த்திகளே. ஓர் அரசன் ஆட்சிக் காலத்தில் நிகழும் அரிய நிகழ்ச்சிகளை, அவை நிகழ்ந்த காலமுறைப்படி விளக்கும் மெய்கீர்த்தியைத் தமிழில், இனிய எளிய அகவற்பாவில் ஆக்கிக் கல்வெட்டின் தொடக்கத்தில் அமைக்கும் அரிய வழக்கத்தை முதலில் மேற்கொண்ட அரசன், நம் அருண்மொழித்தேவனே ஆவன்.

அரியணை ஏறிய நான்காண்டிற்குள்ளாகவே, இவன் பாண்டியனையும், சேரனையும் வென்று அவ்விருவர் நாட்டிலும் சோழர் ஆணையே செல்லும்படிச் செய்துவிட்டமையால், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர் முடிகளையும் ஒருங்கே சூடிய முதல்வன் எனும் பொருள் தோன்ற, இவனுக்கு மும்முடிச் சோழன் எனும் சிறப்புப் பெயர் சூட்டினார்கள் மக்கள், மன்னர்களுக்கெல்லாம் மன்னன் எனும் பொருள் தரும் இராசராசன் எனும் பெயரைச் சூட்டிக்கொண்டான் இவனும், அன்று முதல், அருண்மொழித்தேவன் எனும் அவன் பிள்ளைப் பெயர் மறைந்துபோக, இராசராசன் என்ற அச்சிறப்பு பெயரே அவன் இயற்பெயராய் அமைந்துவிட்டது.