பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31

இராசராசன், அம்மேலைச் சாளுக்கிய மன்னன் மீது தன் மகனை ஏவினான். இராசேந்திரனும் தன் பெரும்படையோடு அந்நாடு புகுந்து, அந்நாட்டுப் படையை அறவே அழித்துவிட்டுப் பெரும் பொருளோடு தஞ்சை வந்து சேர்ந்தான். இப்படையெடுப்பின் பயனாய்த் துங்கபத்திரை ஆற்றின் தென்கரை வரையுள்ள நாடுகள் அனைத்தும் சோழர் ஆட்சிக்கீழ் வந்துற்றன.

இந்நிலையில், சோணாட்டிற்கு வட கிழக்கில், கிருஷ்ணை, கோதாவரி ஆறுகளுக்கு இடையில் இருந்த வேங்கிநாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஓங்கிவிட்டது. அந்நாட்டை அப்போது ஆண்டிருந்தவர் கீழைச்சாளுக்கியவராவர். வாதாபி சாளுக்கியர் வழிவந்த வெற்றி வீரனும், வடநாட்டுப் பேரரசன் அர்ஷனையும், தென்னாட்டு பேரரசன் மகேந்திரவர்ம பல்லவனையும் வெற்றி கொண்டோனும் ஆகிய இரண்டாம் புலிகேசி என்பான், ஆந்திர அரசர்களை வென்று, அவர் ஆண்டிருந்த வேங்கி நாட்டைக் கைப்பற்றிய போது, அதன் ஆட்சிப் பொறுப்பினைத் தன் இளவல் விஷ்ணுவர்த்தனன் என்பவன்பால் ஒப்படைத்தான். வாதாபிசாளுக்கியர்க்கு அடங்கிய அரச குலத்தவராய் ஆண்டிருந்த அவன் வ்ழிவந்தோர், அவ்வாதாபிச்சாளுக்கிய நாடு, இராஷ்டிரகூடர் ஆட்சிக்குட்பட்டதும் தனியரசு அமைத்துக் கொண்டனர்; அன்று முதல் தங்களைக் கீழைச்சாளுக்கியர் என அழைத்துக் கொண்டு, வேங்கிநாட்டின் உரிமை பெற்ற அரச குலத்தவராய் ஆண்டு வரலாயினர்.

இராசராசன் சோணாட்டு மணிமுடியைத் தாங்கிக் கொண்டிருந்தபோது, வேங்கிநாட்டில் தாயத்தாரிடையே ஆட்சி உரிமைப் போர் தலைதூக்கி நின்றது. மூத்தோன் வழிவந்த சக்திவர்மனையும் அவன் தம்பி விமலாதித்தனையும் நாடு கடத்திவிட்டு இளையோன் வழிவந்தவர் நாடாண்டிருந்தனர். ஆட்சியை இழந்து அலைந்து திரிந்த அண்ணனும் தம்பியும் சோணாடு வந்து இராசராசன்