பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32

பால் அடைக்கலம் புகுந்தனர். சோணாடு வந்து வாழும் அவ்வரசிளங்குமரருள் இளையோனாகிய விமலாதித்தன் பால், இராசராசன் அரும்பெறற்புதல்வியாகிய குந்தவைக்குக் காதல் உண்டாயிற்று: அஃதறிநத இராசராசனும் அவர் இருவருக்கும் மனம்முடித்து மகிழ்ந்தான்; இத்திருமணத்தின் பயனாய், வேங்கிநாட்டு ஆட்சியைத் தன் அரசவை வந்து வாழும் அரசிளங்குமரர் பால் ஒப்படைக்க வேண்டும் என்ற உணர்வு இராசராசன் உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது.

அந்நிலையில், நெல்லூர் மாவட்டத்திற்கு வடக்கில் விளங்கிய நாடுகளாகிய சீட்புலி நாட்டையும், பாகி. நாட்டையும் ஆண்டிருந்த தெலுங்குச் சோழர்களை வென்று அடக்கவேண்டிய இன்றியமையா நிலை ஒன்று இராசராசனுக்கு ஏற்பட்டது; அந்நாடு நோக்கிச் செல்லும் சோழர் படைக்குத் தலைமை தாங்கிச் செல்லும் தன் தண்டத் தலைவனுக்குத் துணையாகச் சக்திவர்மனையும் இராசராசன் அனுப்பியிருந்தான். அப்போரில் சக்திவர்மன் தன் ஆற்றல் அனைத்தையும் காட்டி அருஞ்சமர் புரிந்து வெற்றி பெற்றான். அதன் பயனாய்ச் சீட்புலிநாடும், பாகிநாடும் சோழர் உடமை ஆயின. அந்நிகழ்ச்சி, சக்திவர்மன்பால் இராசராசன் கொண்டிருந்த அன்பைப் பேரன்பாக்கிற்று. அதனால் அவனை வேங்கி நாட்டிற்கு வேந்தனாக்கும் பணியை அன்றே மேற்கொண்டான்; அவ்வாறே வேங்கி நாட்டின் மீது போர்த்தொடுத்து, இளையோன் வழியினரை அரியணையிலிருந்து அகற்றிவிட்டு, சக்திவர்மனை அரசனாக்கி அன்பு செய்தான்.

வேங்கி நாட்டிற்கு அவன் ஆற்றவேண்டிய கடமை அவ்வொன்றோடு நின்று விடவில்லை. சக்திவர்மனை அடுத்து அரியணையேறிய விமலாதித்தன் காலத்தில், அவ்வேங்கி நாட்டிற்கு வடக்கில் உள்ள கலிங்க நாட்டில்