பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35

ஒற்றைக்கல் நந்தி பன்னிரண்டடி உயரமும், பத்தொன்பதரை அடி நீளமும், எட்டேகால் அடி அகலமும் உடையது. மண்ணல்லது மலைகாணாத் தஞ்சை மாவட்டத்தின் நடுவே, முழுதும் கருங்கல்லால் ஆன இத்துணைப்பெரிய கோயிலைக் கட்டிமுடித்த, இராசராசனின் இறவாப் புகழும் பெருமையுந்தான் என்னே!

முதல் இராசேந்திரன் : பார்புகழும் பேரரசன் இராசராசனுக்கும், அவன் தேவியருள் வானவன் மாதேவி என வழங்கும் திரிபுவனமாதேவியார்க்கும் மார்கழி ஆதிரை நன்னாளில் பிறந்த நற்புதல்வன் இவ்விராசேந்திரன். இராசராசன் கட்டிய சோழப் பேரரசிற்குப் பெரிதும் துணை புரிந்தவன் இவனே. அவன் மேற்கொண்ட போர்கள் பலவற்றிற்கும் படைத்தலைமையேற்றுப் பணியாற்றியவன் இப்பெரு வீரனேயாவான். ஆகவே அவன் பெற்ற வெற்றியனைத்தும் இவன் பெற்ற வெற்றிகளேயாம். சோணாட்டின் ஆட்சிப்பொறுப்பினை இவன் ஏற்றுக் கொள்ளுங்காலத்தில், சோணாடு, இன்றைய சென்னை மாநிலத்தையும், மைசூர் நாட்டின் பெரும்பகுதியையும், ஈழநாட்டையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெருநாடாகத் திகழ்ந்தது. சுருங்கச் சொன்னால், துங்கபத்திரை ஆற்றிற்குத் தெற்கே இருந்த இந்தியத் துணை கண்டம் முழுவதிலும் சோழர் புலிக்கொடி ஒன்றே ஓங்கிப் பறந்தது. இவ்வாறு பரந்து அகன்ற ஒருபெரிய நாட்டை, அரியணை ஏறும் தன் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே பெரும்பேற்றினைப்பெற்ற இராசேந்திரன், உள்ளதே போதும் என உளம் அடங்கினான் அல்லன். அவன் ஆற்றலும் ஆண்மையும், அவன் தோளாற்றலைத் தொலை நாட்டில் வாழ்வாரும் அறிந்து பாராட்ட வேண்டும் எனத் துடித்தன. அதன் பயனாய் அவன் மேற்கொண்ட போர்கள் எண்ணற்றனவாம். அம்முறையால் அவன் பெற்ற வெற்றிகளை அவன் மெய்க்கீர்த்தி, கூறும் முறைப்படியே காண்போமாக.