பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


கோசலநாட்டையும் கைக் கொண்டான்; கங்கை நோக்கி விரைந்த சோழர் படை, கங்கை பாயும் வங்காள நாட்டில் பேரரசு செலுத்தும் பால மரபினனான மகிபால மன்னனுக்குக் கீழ்ப்படிந்த குறுநில மன்னர்களாய தன்மபாலன், இரணசூரன், கோவிந்தசந்தன் முதலாயினோரை வென்று, அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட, தண்டபுத்தி, தக்கண லாடம், வங்காளம் முதலாம் நாடுகளில் வெற்றிக் கொடிகளைப் பறக்க விட்டு, இறுதியில் அம்மகிபாலன் இருந்து ஆளும் உத்தரலாட நாட்டில் அடியிட்டது. ஆங்குத் தன்னை வந்தெதிர்த்த அவனை அமரில் வென்று, அடிமை கொண்டான் சோழர் படைத் தலைவன்; அம்மட்டோ! அவன் உரிமைச் சுற்றமும், உடைமைகள் பலவும் சோழர் உடைமைகளாயின. இறுதியில் தன்னோடு போரிட்டுத் தோற்ற பேரரசர் ஒவ்வொருவர் தலை மீதும் கங்கை நீர் நிரம்பிய குடங்களை எற்றித் தமிழ்நாடு நோக்கி முன்னே போக விட்டுப் பின் தொடர்ந்தான், தமிழ்நாட்டுப் படைப் பெருமையை வடநாட்டு மன்னரெல்லாம் மதிக்கும்படிப் பண்ணி, வெற்றித் திருமகளை, வடநாட்டில் வதுவை முடித்து, பொங்கும் பெருவளத்தோடும் கங்கைத் திருநீரோடும் திரும்பி வரும் தன் படைத் தலைவனை வரவேற்க, இராசேந்திரன் கோதாவரி ஆற்றங்கரையில் காத்து நின்றான். வந்த தலைவனை வாழ்த்தி, வரவேற்றுப் பெருமை செய்தான். பின்னர்ப் பகையரசர் தாங்கி வந்த கங்கை நீரால் தலைநகரைத் தூய்மை செய்து, அந்நகர்க்கு அவ்வெற்றியை நினைவூட்டும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் திருப்பெயர் இட்டான்; கங்கை கொண்ட சோழன் எனத் தானும் ஒரு புதுப் பெயர் புனைந்து கொண்டான்; தான் அமைத்த ஏரிக்கும் சோழ கங்கம் என அவ்வடநாட்டு வெற்றியால் பெயர் சூட்டினான்.

வடநாட்டு வேந்தர்களையெல்லாம் வென்று, கங்கை நீரைக் கொணர்தல் வேண்டும் என்ற வேட்கை நிறை