பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


சாளுக்கிய நாட்டில் தன் ஆணைசெல் வழி காண்பதில் கருத்தைப் போக்கியிருந்தான். அந்நிலையில், அண்ணன் பகைத்து நிற்கும் இந்நிலையில், அவ்வண்ணன் பகைவர்களுள், பெரும் பகைவனாகிய வீர ராசேந்திரன் நட்பைப் பெறுவது நல்லது என்று விக்கிரமாதித்தனுக்கு அரசியல் நெறி காட்டினான் கடம்பர் குலக் காவலன் சயகேசி. சோணாடு புகுந்து வீர ராசேந்திரனுக்கு, விக்கிரமாதித்தன் விருப்பத்தை அறிவித்தான். அதை எதிர் நோக்கியிருந்த சோணாட்டு மன்னன், தன் மகள் ஒருத்தியை, மேலைச் சாளுக்கிய மரபில் வந்தானுக்கு மணம் முடிக்க மனம் இசைந்தான். இரு குலத்தவரையும் ஒன்று படுத்தும் அப்பெருமணம், அவ்விருநாடுகளுக்கும் எல்லையாக ஒடும் துங்கபத்திரை ஆற்றங்கரையில் இனிது நடைபெற்றது. மணம் முடிந்த மறு கணமே, வீரராசேந்திரன், சோமேசுவரன் மீது போர் தொடுத்து வென்று மேலைச் சாளுக்கிய அரியணையில் சோழர் குல மருமானை அமர்த்தி அகம் மகிழ்த்தான்.

சோழர்குலப் பேரரசனாகிய இராசராசன் தன் மகளை விமலாதித்தனுக்கு மணம் செய்து தந்து, கீழைச்சாளுக்கியர் உறவினைப் பெற்றுச் சோணாட்டின் வடகிழக்கு எல்லைக் காப்பிற்கு வழி கண்டான் என்றால், அப்பேரரசன் பெயரனாகிய வீர ராசேந்திரன், தன் மகனை விக்கிரமாதித்தனுக்கு மணம் செய்து தந்து, மேலைச் சாளுக்கியர் உறவினைப் பெற்று வடவெல்லைக் காப்பிற்கு வழி கண்டான். வாழ்க அவன் அரசியல் அறிவு!

அதிராசேந்திரன் : விசயாலயன் வழி வந்த சோழர் குலத்தவருள் இறுதியாக அரசாண்டவன் இவ்வதிராசேந்திரன். வீர ராசேந்திரன் மகனாகிய இவன் ஆட்சி, ஒரு சில திங்கள் அளவே நடை பெற்றது. அதன் பிறகு, கீழைச் சாளுக்கியர் குலத்தில், சோழர் குலத்து வந்தாளுக்குப் பிறந்து, சோழர் குலக் காவலனாய் நாடாண்ட குலோத்துங்கன், சோணாட்டு அரியணையில் அமர்ந்து விட்டான்.