பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



61


பட்டப் பெயர் பூண்டவனுக்குப் பிறந்த போது, இராசேந்திரன் எனத் தாய்ப் பாட்டன் பெயர் சூட்டப்பட்டதே யல்லால், விமலாதித்தன் எனத் தந்தையை ஈன்ற பாட்டன் பெயர் சூட்டப்படவில்லை. இந் நிகழ்ச்சிகளால், குந்தவையை மணங் கொண்ட அந்நாள் தொட்டே, சாளுக்கியர் தங்களைச் சோழர் குலத்தவராகவே கருதிவிட்டனர் என்பது புலனாதல் அறிக.

மேலும், சோழர் குலக் கன்னியர்க்குப் பிறந்த சாளுக்கிய இளவரசர்கள், வடிவாலும் சோழர்களாகவே விளங்கினார்கள். குலோத்துங்கன் பிறந்த போது அவனைத் தாமரை மலர் போன்ற தம் கைகளில் ஏந்திக் கண்ணுற்ற, அவன் தாயை ஈன்ற பாட்டி, கங்கை கொண்ட சோழன் மாதேவி பெயரனின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கி, அவன் வடிவால் தன் கணவனை முழுவதும் ஒத்திருப்பது கண்டு, உளம் மகிழ்ந்து, “இவன் திங்களின் வழி வந்த, சாளுக்கியர் குடியில் பிறந்தவனேனும் ஞாயிற்றின் வழி வந்தோராகிய எம் சோழர் குலத்தவனே ஆவன்; சாளுக்கியனேனும், சோணாடாளும் உரிமையுடையான்” என உரிமை கொண்டாடினாள் என்றும், சாளுக்கிய குல தேவி அம்மங்கை வயிற்றில் வந்தவனேனும், சோழர் குல தேவி, அவனைத் தன் மகனாகவே ஆக்கிக் கொண்டாள் என்றும் கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

அலர் மழைபோல் மழைபொழிய, அதுகண்டு
கங்கை கொண்ட சோழன்தேவி,
குலமகள்தன் குலமகனைக் கோகனக
மலர்க்கையால் எடுத்துக்கொண்டே,
அவனியர்க்குப் புரந்தரனாம் அடையாளம்
அவயவத்தின் அடைவே நோக்கி
"இவன் எமக்கு மகன்ஆகி இரவிகுலம்
பரிக்கத் தகுவன்” என்றே.