பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64

குலோத்துங்கனுக்கும் இருந்தது. மேலும், பரந்தகன்ற பெரிய நாட்டில் பேரரசு செலுத்தும் சோழர்குலச் சிற்றரசர்களுக்கு நிகராகப் படைப்பயிற்சி பெற்றிருக்கும் தன்னால், அப்பேரரசிற்கு அடங்கிய சிறிய நாடாகிய வேங்கி நாட்டு அரியணையில், தன் ஆற்றலையும் ஆண்மையையும் அடக்கிக்கொண்டு அமர்ந்திருத்தல் இயலாது என்பதையும் உணர்ந்தான்; பருத்த பெரிய அவன் தோளாற்றல், களம் பல புகுந்து வெற்றி பல பெறும் வீரவாழ்வு பெறத் துடித்துக்கொண்டிருந்தது; மேலும், தன் மாமன் இரண்டாம் இராசேந்திரன், மேலைச் சாளுக்கியரோடு, துங்கபத்திரை ஆற்றங்கரையில் ஒயாப்போர் மேற்கொண்டிருக்கும் இந்நிலையில், தன் சிற்றப்பனோடு பகைகொண்டு போரிடுவது போர் முறையாகாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். இந்நிலைமைகளையெல்லாம் எண்ணிப்பார்த்து, வேங்கி நாட்டு அரியணையில் விசயாதித்தனே இருந்து ஆளட்டும் என விடுத்து, வெற்றித் திருவுலா விரும்பி வேங்கி நாடு விட்டு வெளியேறினான்.

போர் விரும்பிப் புறப்பட்ட குலோத்துங்கன், நேரே சக்கர்க்கோட்டம் சென்றான், சக்கரக்கோட்டம், இன்றைய மத்திய மாகாணத்தில் உள்ள வத்ச நாட்டில் இருந்தது. இக்காலை, அது சித்ரகூட் எனும் பெயர் பூண்டுளது; அந்நாட்டை, தாராவர்ஷன் என்பான் அக்காலை ஆண்டு கொண்டிருந்தான்: வைரச் சுரங்கங்களும், வேழங்களும் மலிந்த வயிராகரம் எனும் நிலமும் அவன் ஆட்சிக்கீழ் இருந்தது. சக்கரக்கோட்டம் புகுந்த குலோத்துங்கன், வத்தவர்குல வேந்தன் தாராவர்ஷனை வென்றான்; அந்நாட்டை எரியூட்டி அழித்தான். தோற்ற வேந்தன் தாராவர்ஷன் வந்து அடிபணிந்தான். வ்யிராகரத்து விழுநிதியாகிய வ்ழங்கள் எண்ணற்றனவற்றயும் வகை வகையான பிற வளங்களையும் திறையாகத்