பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75

அமரும் உரிமை தனக்கு இருப்பதையும் உணர்ந்தான், உடனே வடநாட்டு வாழ்வை வெறுத்து, விரைந்து தென்னகம் வந்து, கங்கைகொண்ட சோழபுரத்தில், சோணாட்டுக் காவலனாய் முடி புனைந்து கொண்டான்; அவனை அவன் இளமைப் பருவம் தொட்டே அறுந்திருந்த சோணாட்டு மக்களும் அவன் ஆட்சித் தலைமையை விரும்பி ஏற்றுக் கொண்டனர்; சாளுக்கியச் சிற்றரசன் சோழர்குலப்பேரரசனாம் பேற்றினைப் பெற்றான்; அவனுக்கு அப்பெரும்பேற்றினை அளித்த சோணாடு, அவன் வரவால் அமைதி நிலவும் நல்வாழ்வையும், அலை கடலுக்கு அப்பாலும் சென்று பரவும் வாழ்வையும் பெற்றுப் பெருமையுற்றது. சோணாட்டு மக்கள் பண்டைப் பெருவாழ்வு மீள மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

எட்டுத்திசைக் கொற்ற வேந்தர்களும் குலோத்துங்கன் குடைநிழற்கீழ் வந்து குவிந்தார்கள். நான் மறைகளும் நன்னெறி நிலவ நாடெங்கும் முழங்கின; சேரன், வீரக்கழல் ஒலிக்கும் குலோத்துங்கன் காலடியில் வந்து சேர்ந்தான்; மதுரை மன்னன் கடலிடைத் தீவுகளுக்குச் சென்று கரந்துறை வாழ்வு மேற்கொண்டான். புலவர்கள் பாடிப் பெறும் பரிசில் பொருள்களைச் சுமக்கமாட்டாது சுமந்து சென்றனர்; பொதிகாளைகள் பகையரசர்கள் வழங்கிய பகுதிப் பொருள்களைச் சுமந்து வரிசை வரிசையாக வந்து சேரலாயின; அவன் ஆணைக்கு அடங்கிய சிற்றரசர் பலர் ஆங்காங்கிருந்து அவன் ஏவல் வழி அரசாளத் தொடங்கினர்; அவன் தோள்கள் ஆட்சிச் சுமை தாங்கும் ஆணவத்தால் பருத்துப் பெருமையுற்றன.


“நிழலில் அடைந்தன திசைகள்; நெறியில் அடைந்தன மறைகள்;
கழலில் அடைந்தனர் உதியர்; கடலில் அடைந்தனர் செழியர்;
பரிசில் சுமந்தன. கவிகள்; புகடு சுமந்தன திறைகள்;
அரசு சுமந்தன இறைகள்; அவனி சுமந்தன புயமும்.”