பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
77



செலுத்தினானல்லன்; அப்போர் முறை ஒரு பேரரசிற்கு ஆக்கத்தினும் அழிவையே அளிக்கும். என அறிந்திருந்தமையால், எந்நாட்டின் மீதும் வலியச் சென்று போர்த் தொடுப்பதை அவன் விரும்பினானல்லன்; ஆனால் தன் நாட்டின் மீது போர் தொடுப்பவரையும், தன் தலைமையை வெறுத்து விடுதலை பெற விரும்பும் வேந்தர் களையும் வென்று பணி கொள்வதில் அவன் காட்டிய வீரமும் விரைவும் அம்மம்ம! வாய்விட்டுக் கூறமாட்டா விழுச்சிறப்புடையவாம். இவ்வகையால் குலோத்துங்கன் புகுந்த போர்க்களங்கள் சிலவற்றையும், அக்களங்களில் அவன் பெற்ற வெற்றிகள் சிலவற்றையும் கண்டு செல்வோமாக.

மேலைச்சாளுக்கியரொடு மேற்கொண்ட போர்: குலோத்துங்கனோடு முதன் முதலில் எதிர்ந்து போரிட வந்த மன்னன், மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்தனே ஆவன். சோணாட்டு அரசியலில் தன்கை தாழ்ந்து போகக் குலோத்துங்கன் கை ஓங்கிவிட்டதை வெறுத்த விக்கிரமாதித்தன், குலோத்துங்கன் கொற்றத்தைக் குலைப்பதில் கருத்தைப் போக்கினான். குலோத்துங்கன் பேராண்மையையும் படைப்பெருமையையும் அறிந்திருந்த அவன், அவற்றை அழித்தொழிக்கும் ஆற்றல் பெரும் அளவு, தன் படைப் பெருமையைப், பெருக்குவதில் சில ஆண்டுகளைக் கழித்தான். ஐந்து ஆண்டுகளாக அரும்பாடுபட்டுப் படையைப் பெருக்கினான்; மேலைச்சாளுக்கியனின் மனக்குறிப்பைக் குலோத்துங்கனும் அறிந்திருந்தான்; அதனால், அவன் படையெதிர்ப்பை எதிர் நோக்கித் தன் படையையும் பெருக்கிக் கொண்டே வந்தான். மேலும், மேலைச்சாளுக்கியர்க்குரிய குந்தள நாட்டரசியலில் குழப்பநிலை நிலைபெறுவதையுணர்ந்து, அதைத் தனக்கு ஆக்கநிலையாக ஆக்கிக் கொள்வதிலும், தன் அரசியல் திறத்தைப் பயன் கொண்டான். குந்தள நாட்டின் ஒரு பகுதி விக்கிரமாதித்தன் ஆட்சிக்கீழ் இருக்க,