பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
81

காலம் காத்திருந்தான். எப்படையையும் எதிர்த்தழிக்க வல்ல ஆற்றல் உடையதாகிவிட்டது என்பதை அறிந்து கொண்ட அக்கணமே, குலோத்துங்கன் பாண்டிநாடு நோக்கிப் புறப்பட்டுவிட்டான்; பாண்டியர் ஐவரும் ஒன்று கூடி வந்து குலோத்துங்கனை எதிர்த்தனர்; பல ஆண்டுகளாகத் திரட்டி வைத்திருந்த பாண்டியப் படையும், உரம்மிக்கு உரிமைப் போர் நடத்திற்று; ஆயினும் குலோத்துங்கன் கொற்றத்தின் முன் அவை எம்மாத்திரம்? சோழர் படையின் தாக்குதலைத் தாங்கமாட்டாது சோர்ந்து விட்டது; பாண்டிய மன்னர்கள், படைகளைக் கைவிட்டுப் புறங்காட்டி ஓடிக் காட்டுக்குள் புகுந்து மறைந்துவிட்டார்கள். வாகை சூடிக் கள வேள்வி நடத்திய குலோத்துங்கன், பாண்டிநாடு முழுவதும் வெற்றித் தூண்களை நாட்டினான். பாண்டியர்க்குப் பெருமை அளிக்கும் முத்து கிடைக்கும் கடற்றுறைப் பட்டினங்களையும், சந்தனம் வளரும் பொதியிற் கூற்றத்தையும், காவிரி பிறக்கும் சைய மலையையும், குமரி முனையையும் கைப்பற்றிக்கொண்ட கொற்றத்தோடு கங்காபுரி வந்தடைந்தான்.

சேரருடன் மேற்கொண்ட போர்: தங்கள் நாட்டில் சோழர் ஆட்சி நடைபெறுவதை வெறுப்பதில், சேரர்கள் பாண்டியர்க்குச் சிறிதும் குறைந்தவரல்லர்; சோழ அரசை அழித்துத் தம் அரசு அமைத்து ஆள்வதில் ஆர்வம் மிக்க சேரர்களும், பாண்டியர்களைப் போலவே, அதிராசேந்திரன் இறந்தமையால் சோணாட்டில் தலை தூக்கிய அமைதியின்மையையே பயன்கொண்டு கலகம் விளைவித்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர்; அவர்கள் ஆட்சியும் ஆங்குச் சிலகாலம் நடைபெற்றது. இறுதியில் பாண்டியரை வெற்றிகொண்ட குலோத்துங்கன் சேர நாடு சென்று சேர்ந்தான். மேலைக்கடற்கரையைச் சார்ந்த வீழிஞம், குமரிமுனைக் கோட்டாறு, காந்தளூர்ச்சாலை முதலான ஊர்களில் பெரும்போர் நடைபெற்றது,

க-6