பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
85

யரணால் சூழப்பெற்றது. அம்மலைகள் பொடிபடும்படி பெரும்படையை உடன்கொண்டு செல்; கலிங்க நாட்டுக் களிறுகள் களப்போர் புரிவதில் திறமை வாய்ந்தன; அக்களிறுகள் எண்ணற்றவற்றைக் கைப்பற்றிக் கொணர்க; அந்நாட்டுக் காவலனையும் சிறை செய்து தருக” எனப் பணித்தான்.

சோழ மண்டலத்தில் குலோத்துங்க சோழ வள நாட்டில், திருநறையூர் நாட்டில், வண்டை நகரில் வந்தோனாகிய கருணாகரத் தொண்டைமான், குலோத்துங்கன் பணித்த பணியை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டான்; “வடதிசை அரசர்களை அறவே அழிப்பேன்; வேந்தே! விடைகொடு” என்று வேண்டிக்கொண்டான்; வேந்தனும் விடை கொடுத்தான்; அவ்வளவே. அடுத்த கணமே, போர் முரசு ஒலிக்க, சோழர் பெரும்படை வடநாடு நோக்கிப் புறப்பட்டு விட்டது; வழியறிந்து செல்லற்காம் பகலில் நடந்தும், இரவில் இருந்து இளைப்பாறியும் சென்ற அச்சேனை, பாலாறு, குசைத்தலையாறு, பொன் முகரியாறு, கொல்லியாறு, வடபெண்ணையாறு, மண்ணாறு, குன்றியாறு, கிருஷ்ணைப் பேராறு, கோதா வரியாறு, பம்பையாறு, கோதமையாறு, கோடிபலி ஆறு என்ற சிற்றாறுகளும் பேராறுகளுமாகிய ஆறுகள் பன்னிரண்டையும் வரிசையாகக் கடந்து வடகலிங்கம் அடைந்தது.

கலிங்கம் புகுந்த சோழர் பெரும்படை அந்நாட்டு நகரங்களைக் கொள்ளையடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும் அழித்தவாறே அனந்தவன்மன் அரணை நோக்கி விரைந்து சென்றது. சோழர் படைவரவையும், அப்படையாலாம் அழிவுகளையும் கண்டு கலங்கிய கலிங்க நாட்டு மக்கள், உடல் பதற, உடை அவிழ ஓடி, அனந்தவன்மன் அடி வீழ்ந்து, “அரசே! சோழர் பேரரசிற்குத் தர வேண்டிய திறையைத் தர மறுப்பது தகாது எனக் கூறிய எம் சொற்களைக் கேட்டிலை; அதனால் சினங்கொண்ட