பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


சோழர் படை நம் கலிங்க நாட்டில் புகுந்துவிட்டது. அதன் வரவால் மதில்கள் இடிகின்றன; பதிகள் எரிகின்றன; எங்கும் புகை எழுகின்றது; மரச்சோலைகள் மடிகின்றன; குடி மக்கள் கெடுகின்றனர்; சோழர் படையோ மேலும் மேலும் வந்து குவிகின்றது; கடல் பொங்கி எழுந்தால் புகலிடம் எங்கே கிடைக்கும்; கடல் போலும் சோழர் பெரும்படை பொங்கி எழுந்தால், நம்மை அழியாமல் காக்க வல்ல அரண் எங்கே உளது?” என உரை குழற முறையிட்டனர்.

மக்கள் முறையீட்டைக் கேட்டும், அவர் நிலையைக் கண்டும், அனந்தவன்மன் அறிவு வரப் பெற்றானல்லன் “கலிங்க நாடு, கான் அரனும், மலை அரணும் உடையது; அதனால் அழிக்கலாகா ஆற்றல் மிக்கது என்பதை அறிய மாட்டாமையால் சோழர் படை புகுந்து விட்டது; புகுந்த படை படும் பாட்டை இனிக் காண்போம்; பாராளும் பேரரசன் குலோத்துங்கனையே பணிய மறுக்கும் யான், அவன் படைத் தலைவனைப் பணிவனோ? அத்துணை எளியவனோ யான்?” என இகழந்து கூறினான்; வந்துள்ள சோழர் படையின் பெருமையையும்; கலிங்க நாட்டுக் காவலனின் சிறுமையையும் கண்ணுற்ற அமைச்சன் எங்கராயன், அரசன் முன் வந்து, “வேந்தே! வந்த படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமானின் பேராற்றலை நீ அறிவாய்; பாண்டியர் ஐவர் அழிந்ததும்,சோழர் படைத் தலைவனால் அல்லது, சோழர் குலக் கோமகனால் அன்று; சோழர் படை கண்டு சேரர் பட்ட பாட்டினை நீ அறிவாயோ? நவிலையில் ஆயிரம் களிறுகளைக் கைப்பற்றியதும் சோணாட்டுப் படையே; அளத்தி அழிந்ததும் அப்படையால்; வத்த நாட்டை வென்றதும் அவன் படையே; சோழர் படைத் தலைவரால் தம் அரசிழந்த அரசர்களை எண்ணிக் கூறல் இயலுமோ? ஆகவே, வேந்தன் வந்திலன்; படைத் தலைவனே வந்துளான் எனப் பழிப்பது பொருந்தாது? புடைத் தலைவன் பெருமையை இன்று