பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. குலோத்துங்கன் கோல் முறை


தம் குடை நிழற்கீழ்ப் பரந்த பெரிய நாடுவந்து வாழ வேண்டும் என விரும்புவதைக் காட்டிலும், வேந்தர்கள், அக்குடைக் கீழ் வாழும் குடிமக்களின் நலம் பெருகுதல் வேண்டும் என்றே விரும்புதல் வேண்டும், என்ற செங்கோல் முறையைச் சிறக்க அறிந்திருந்தான் குலோத்துங்கன்:நாட்டு மக்களின் நலம் பெருக்குவதே குலோத்துங்கன் குறிக்கோள்; அரசு சிறிதேயாயினும், அந் நாட்டின் நலன் பெரிதாதல் வேண்டும். சிறுகக் கட்டிப் பெருக வாழ்வதே சிறந்த அரசியல் முறையாம். அப் பேருள்ளத்தைச் சிறக்கப் பெற்றிருந்தமையால், குலோத்துங்கன் ஆற்றிய அரசியல் செப்பங்கள் எண்ணற் றனவாம். அவற்றுள் ஒரு சிலவற்றை ஈண்டுக் கண்டு செல்வோமாக.

அங்கிய நாட்டார்பால் அன்புடைமை: ஒரு நாட்டை அழித்து அடிமை கொள்வதால் ஆகும் ஆக்கத்தினும், அந் நாட்டின் பால் அன்புகாட்டி அணைத்துக் கொள்வதால் ஆகும் ஆக்கமே பெரிதாம் என்ற பேருண்மையை அறிந்தவன் குலோத்துங்கன், அவ்வுண்மையுணர்ந்து, கடல்கடந்த நாடுகளாகிய கடாரத்தோடும், காம்போசத் தோடும் அன்பு கொண்டு அந்நாடுகளுக்குச் சென்று, அந்நாட்டு அரசர்களின் நட்புறவு பெற்று மீண்டதை மூன்னரே கண்டோம், கடல் இடைபட்ட நாட்டவரின் நட்பை நாடா திருப்பனோ? காசிமா நகர்க்கு வடமேற்கில்,